பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் காரணமாக, திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளதுதான் பேரதிர்ச்சி.

எடமலைப்பட்டி புதூர் பள்ளி

எடமலைப்பட்டி புதூர் பள்ளி
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்திட வேண்டும். 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் உடனடியாக இணைப்பதன்மூலம், தொடக்கக் கல்விக்கு மூடு விழா நடத்துவதையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக,  இன்று  முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. வட்டார அளவில்கூடியுள்ள அரசு ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகள்குறித்து முழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி எடைமலைப்பட்டி புதூரில் உள்ள திருச்சி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்றோம். பள்ளியில் நுழைவுவாயில் பூட்டப்பட்டிருந்தது. தொடக்கப் பள்ளியின் வகுப்பறைக் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. நம்மைப் பார்த்த பணியாளர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். அதே வளாகத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி வழக்கம்போல் செயல்படுவதைக் காண முடிந்தது.



ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு அரசும், நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகும், போராட்டம் தொடரும் நிலையில், பள்ளிக்கு விடுமுறை விட்டிருப்பதும், சில இடங்களில் ஆசிரியர்கள் வராத நிலையில் மாணவர்களைப் பாதுகாப்பது யார் என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர்,  அரசின் அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்றும், தமிழகம் முழுவதும் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அடுத்தடுத்த தினங்களில் போராட்ட வடிவத்தை மாற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம்
ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் போராட்டம்
ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட அளவில் 70 சதவிகித ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதுமாக அனைத்துத் துறையினர் ஜாக்டோ ஜியோ சங்க ஊழியர்கள் 13 இடங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன்கேட் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.


“கடந்த 2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமுல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படா வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். 3500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

செங்கல்பட்டு பகுதியில் உள்ள நத்தம் நகராட்சி ஆரம்பப் பள்ளி, வடமலை நகராட்சி நடுவிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆசிரியர்களும் இல்லை. மாணவர்களும் இல்லை. இதனால் இந்தப் பள்ளிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அதுபோல்அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு சில ஆசிரியர்களே இன்று பணிக்கு வந்துள்ளனர். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அவர்களே பாடங்களை படித்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்



திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் இன்று ஆசிரியர்கள் பணிக்கு வராமல் மாணவர்களின் கல்விப் பணி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குமார் நகர் என்ற பகுதியில் இயங்கி வரும் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் பள்ளியை திறக்காததால் மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்ல முடியாமல் சாலையிலேயே அமர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பல பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் தங்களின் பிள்ளைகளை வீட்டுக்கே திருப்பி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கச் சென்றுவிட்டது மாணவர்கள் உட்பட பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.

மதுரை




ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாததால் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் பள்ளிகள் பூட்டிக்கிடந்தன. பள்ளிகள் இயங்கினாலும் குறைந்த ஆசிரியர்கள்  பல வகுப்பு மாணவர்களையும் ஒருங்கிணைத்து பாடங்கள் நடத்தினர். இதனால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.



கோவை

மாணவர்கள்
மாணவர்கள்

கோவையைப் பொறுத்தவரை, 60 சதவிகிதத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்குபெற்று வருகின்றனர். சில பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுமே போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனால், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. தொடக்கப் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் வரவில்லை. மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால், இரண்டு வகுப்பு மாணவர்களை, ஒரே வகுப்பில் வைத்துக் கண்காணிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மாணவர்கள்

இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களிடம் பேசியபோது, "கடந்த முறை 30 சதவிகித ஊழியர்கள் தான் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், இம்முறை முதல் நாளிலேயே 60 சதவிகிதம் பேர் போராட்டத்துக்கு சென்றுள்ளனர். பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், தற்போது ரிவிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் இல்லாததால், அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு நிர்வாகம், இவர்களின் கோரிக்கையை  ஏற்காவிடின் அடுத்தடுத்த நாள்களில் போராட்டம் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. எனவே, அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர்  பாலச்சந்தர் பேசிய போது, “ ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பாக போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் எனக் கொடுத்திருந்த வாக்குறுதியை எங்களுடைய கோரிக்கைகள் ஏதும் நிறைவேறாததால் திரும்ப பெற்று மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். பல ஆண்டுகளாக நாங்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. நாளை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
ஜாக்டோ-ஜியோ போராட்டம்
ஜாக்டோ-ஜியோ போராட்டம்

எங்கள் கோரிக்கைகளில் முக்கியமானது பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது.அரசு புதிய ஓய்வூதிய கோரிக்கை சிறந்தது எனக்கூறு கின்றது. ஆனால் இராணுவத்திற்கு மட்டும் பழைய ஓய்வூதிய முறையையே வழங்கியுள்ளது. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்னை. பழைய பென்ஷன் முறை பின்பற்றா விட்டால் முதுமையில்  பல ஆயிரம் ஆசிரியர்கள் தற்கொலைச் செய்துகொள்ள நேரிடும்” என்றார்

நன்றி- விகடன்

Whats App Group link