ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர்களும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக  அறிவித்துள்ளனர். கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ-ஜயோ அமைப்பின் சார்பில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. தற்ேபாது அவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இதுவரையில் விலகி  நின்று அரசுக்கு ஆதரவாக இருந்த சங்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றன. குறிப்பாக 4ம் நாள் மறியல் போராட்டத்தில் காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சென்னையில் பங்கேற்றது.  அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பணியாளர்கள் அனைவரும் உணவு இடைவேளையின்போது தலைமைச் செயலகத்தில் கோஷம் போட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இன்றும், நாளையும் அவர்கள்  ஜாக்டோ-ஜியோ அமைப்புக் ஆதரவாக தலைமைச் செயலகத்தில் மனித சங்கிலி போராட்டம், உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

 இந்நிலையில், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணிக்கு வராத நிலையில், தலைமை ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கு விடுமுறையும்  விட்டுவிடுகினறனர். அதனால் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தற்போது போராட்டத்தில் கலந்து கொள்ள  முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, இன்றை போராட்டத்தில் பங்கேற்க  உள்ள தகவலை, மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு மேனிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில்,

ஜாக்டோ-ஜியோவின் ஒட்டுமொத்த கால வரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக, பள்ளியை எங்களால் செம்மையாக நடத்த இயலாத காரணத்தால்,நாங்களும் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கி போராடத்  தீர்மானித்துள்ளோம் என்ற தகவலை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் தலைமை ஆசிரியர்களும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இதுதவிர, தமிழகத்தில் 448 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17பி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட  ஆசிரியர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.