பள்ளிகளில் ஆன்ட்ராய்ட் செல்போன் மூலம் மாணவர்கள் வருகை, சத்துணவு உள்ளிட்ட விபரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் சர்வரின்
மந்தமான செயல்பாடு காரணமாக இவற்றை குறித்த நேரத்திற்குள்  அனுப்ப முடியாமல் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் ஆன்ட்ராய்ட் செல்போன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கென வடிவமைக்கப்பட்ட சாப்ட்வேர் மூலம் ஆசிரியர்கள் இவற்றை பதிவு  செய்து வருகின்றனர். காலையில் 9.30 மணி மற்றும் பகல் 1.30 மணிக்கு மாணவர்களின் வருகை, விடுமுறை உள்ளிட்ட விபரங்கள் இதன்மூலம் அனுப்பப்படுகின்றன. இதேபோல் காலை 11 மணிக்கு சத்துணவு மாணவர்களுக்கான  பட்டியல்கள் தலைமையாசிரியர் மூலம் அனுப்ப வேண்டும்.


இந்த சாப்ட்வேர் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி இதை அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது. இணைய பயன்பாடு அதிகரிப்பு காரணமாக சர்வர் அடிக்கடி மந்தமாகிறது. இதனால், இவற்றை அனுப்புவதில்  ஆசிரியர்களுக்கு பெரும் சிரமம் இருந்து வருகிறது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே பல்வேறு பதிவேடுகளை பராமரித்து வருகிறோம். தற்போது ஆன்ட்ராய்ட் மூலம் மேலும் பல பதிவுகளை மேற்கொள்ள  வேண்டி உள்ளது. இணையவேகம் குறைவு போன்ற தருணங்களில் மிகவும் சிரமப்பட வேண்டியதுள்ளது. அனுப்பிய பதிவுகளுக்கு தினமும் ரிப்போர்ட் வருவதில்லை.


அதனால் நாம் அனுப்பியது சரியாக பதிவாகி உள்ளதா,  இல்லையா என்பதை உணர முடியவில்லை. தலைமையாசிரியர் விடுமுறை எடுத்தால் உதவி தலைமையாசிரியர் மூலம் அனுப்பப்படும் விபரங்கள் செல்வதில்லை. இதனால் உடல்நலம் குன்றி விடுப்பில் இருக்கும்  தலைமையாசிரியர்களை இதற்காக தொந்தரவு செய்ய வேண்டியதுள்ளது.

சத்துணவு தகவல் விபரம் சென்றடையாவிட்டாலும் ஆசிரியர்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு நச்சரிக்கின்றனர். இதனால் வகுப்பறையில் கவனம் செலுத்த முடியவில்லை. சத்துணவு என்பது தனி துறை. எனவே அதற்கென  உள்ள அலுவலர்கள் மூலம் இப்பணியை மேற்கொள்ளலாம். தொழில்நுட்பம் வேலையின் சிரமத்தை குறைப்பதாக இருக்க வேண்டும். ஆனால் இதில் மேலும் பணிச்சுமையே அதிகரித்துள்ளது. மன உளைச்சலாகவும் உள்ளது.  எனவே இந்த தொழில்நுட்பங்களை முறைப்படுத்தி மேம்படுத்த வேண்டும்’’ என்றனர்

Whats App Group link