ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியை உள்ளடக்கிய கல்வித் திட்டத்தில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள், இதர பணியாளர்கள் 700க்கும் மேற்பட்டவர்கள்  தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், பணி நீக்கம் செய்யப் போவதாக அரசு அறிவித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியை உள்ளடக்கிய(எஸ்எஸ்ஏ) திட்டத்தில் தமிழக பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, இயன்முறைப் பயிற்சி, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அளித்து வரும் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல் நேர பாதுகாப்பு மைய பாதுகாவலர், உதவியாளர் ஆகியோர் கடந்த 1998 முதல் மாவட்ட தொடக்க கல்வித் திட்டத்திலும், 2002 முதல் அனைவருக்கும் கல்வி இயக்கத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.

 இவர்கள் மேற்பார்வையில் அனைத்து பள்ளிகளிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் மாற்றுத் திறனாளி குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 2002ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 குறிப்பாக 2012ம் ஆண்டு முதல் சிறப்பு பயிற்றுநர்கள் தொண்டு நிறுவனங்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். வட்டார வள மைய வங்கிகள் மூலம் ஊதியம் பெற்று வந்த சிறப்பு பயிற்றுநர்கள், கிராம கல்விக் குழு வங்கிக் கணக்கு வழியாக ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த ஊதியம்கூட தொகுப்பு ஊதிய முறையில் அல்லாமல் பணிக் கட்டணம் என்ற முறையில் வழங்கப்பட்டுள்ளது.  எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி வரன்முறை உருவாக்கித்தர வேண்டும்.

இந்த திட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களில் பணியாற்றி வரும் ஒருங்கிணைப்பாளர்களை சிறப்புக் கல்வி பயின்றவர்களை பணியமர்த்த வேண்டும். சிறப்பு பயிற்றுநர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.35 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வந்தனர்.

 அனைவருக்கும் கல்வித்திட்ட மாநில திட்ட இயக்குநர் இது குறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் சிறப்பு பயிற்றுநர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் சுமார் 700 பேர், டிபிஐ வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் முன்பு கடந்த 22ம் ேததி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடர்வோம் என்று தெரிவித்த அவர்கள் டிபிஐ வளாகத்தில் தங்கி அங்கேயே உணவு சமைத்து உண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவர்களிடம் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

 இந்நிலையில், டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறப்பு பயிற்றுநர்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

 இதன் பேரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

 இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு நாளை பணியில் சேரப் போவதாக சிறப்பு பயிற்றுநர்கள் அறிவித்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.