சென்னை: புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நாளை திட்டமிட்டபடி தொடங்குகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய ஓய்வு ஊதிய திட்டம், ஊதிய முரண்பாடுகள், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பு ஊதிய பணியாளர்களை நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அரசு தரப்பில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் 2017ம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், போராட்டம் தீவிரம் அடையத் தொடங்கியது. குறிப்பாக அரசு அழைத்து பேச வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஈடுபட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வருடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் 2017 செப்டம்பர் மாதம் தொடரப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்டனர். அதற்கு பிறகு ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தியது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் புதிய ஓய்வு ஊதியம் தொடர்பாகவும், ஊதிய முரண்பாடுகள் தொடர்பாகவும் அரசுத் தரப்பில் போதிய விளக்கம் அளிக்கவில்லை. பொது வழக்கு விசாரணை மீண்டும் கடந்த ஜனவரி மாதம் வந்தபோது, அரசுத் தரப்பில் திரும்பத் திரும்ப கால அவகாசம் கேட்கப்பட்டது. கடைசியாக ஒரு நபர் குழு அறிக்கை, ஊதிய முரண்பாடு மற்றும் நிலுவைத் தொடர்பாக அரசுத் தரப்பில் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இதனால், ஜாக்டோ-ஜியோவை அந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தனர். அதற்கு பிறகும் அரசுத் தரப்பில் 3 மாதம் கால அவகாசம் கேட்டனர். அதனால், ஜாக்டோ-ஜியோ ஏற்கெனவே அறிவித்தபடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தது. திருச்சியில் விரிவான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். போராட்டம் நடத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். முடிவாக, l நாளை 22ம் தேதியில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து, நாளை மு தல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. நாளை காலை 10மணிக்கே இந்த போராட்டம் தொடங்கிவிடும். இதுவரை ஜாக்டோ-ஜியோ சார்பில் முன்வைக்கப்பட்ட 7 அம்ச கோரிக்கைகளுடன், தற்போது, 3500 தொடக்கப்ப பள்ளிகளை உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கை, 3500 சத்துணவு மைங்களை மூடும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்றும், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கி அதில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளையும் இணைத்து 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டதை முறியடிக்கும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியுள்ளது. குறிப்பாக போராட்டத்தில் தீவிரம் காட்டி வரும் இடைநிலை ஆசிரியர்களை முன்கூட்டியே கைது செய்வது, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் நியமிப்பது என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் நியமிக்கும் உத்தரவுகளை வாங்காமல் எதிர்ப்பு தெரிவிக்கவும் ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
* 23 மற்றும் 24ம் தேதி வட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துவது.
* 25ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துவது.
* 26ம் தேதி சென்னையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பது எ்ன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
256 சங்கங்கள் பங்கேற்பு
* தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 56 ஆசிரியர் சங்கங்கள் தீவிரமாக பங்கேற்கின்றன.
* அவர்களுடன் 200 அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் சங்கங்களும் பங்கேற்கின்றன.
* மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், மதுரை மாநகராட்சி ஆசிரியர் நலசங்கம், காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் ஆகியவை ஜாக்டோ-ஜியோ அமைப்பில் நேற்று இணைந்தன.
* உயர்நிலை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆகியவையும் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..