வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பத்தான் உத்தரவிட்டதாகவும், போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜனவரி 22 ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு பலமுறை வலியுறுத்தியும் அதனை ஏற்க ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறுத்து, போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்துள்ளது. மேலும், பணிக்கு வராத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதில் கோர்ட் தலையிட முடியாது. வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்ப தான் உத்தரவிட்டோம். போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை. வேலை நிறுத்த நோட்டீசுக்கும் கோர்ட் தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளது.