தேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.'

ஸ்மார்ட் போன்' வந்த பிறகு, தேர்தல் கமிஷனும், டிஜிட்டல் உலகத்துக்குள் நுழைந்துவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'ஆன்லைன்' மூலமாக, வாக்காளர் பட்டியல் தேடுதல், பெயர்களை கண்டறிதல், ஓட்டுச்சாவடி கண்டறிதல் போன்ற சேவைகளை அளித்து வந்தது. சில, 'மொபைல் ஆப்'களையும், அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில், 'ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன்' என்ற பெயரில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

.மொபைல் போன் மூலமாக, இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், ஒட்டுமொத்த தேர்தல் கமிஷன் தகவல்களும், உள்ளங்கையில் வந்துவிடும்.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:'

ஓட்டர் ஹெல்ப்லைன் - மொபைல் ஆப்'பில், வாக்காளர் அட்டை எண் அல்லது பெயர், தொகுதி விபரங்களை பயன்படுத்தி, எளிதாக, வாக்காளர் பட்டியல் விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஓட்டுச்சாவடி அமைவிடம், பாகம் எண், பாகத்தின் பெயர்கள், வரிசை எண் விபரங்கள் தெரிய வரும். தேர்தல் தேதி விபரத்தை வெளியிடவும், தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எப்படி, யார், என்ன, எங்கு, எப்போது, ஏன் என்ற தலைப்புகளில், வாக்காளர்களின், 51 வகையான கேள்விகளுக்கு, பதில் பெறும் வகையில், 'மொபைல் ஆப்' வடிவமைக்கப்பட்டுள்ளது.தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், செய்திகள், படங்களை, இதில் பார்க்க முடியும்.

நாடு முழுவதும் நடக்கும், தேர்தல் நடவடிக்கை, ஒவ்வொரு வாக்காளரின் இல்லத்துக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், இந்திய தேர்தல் கமிஷனால், இந்த, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.