அன்னவாசல்,ஜன.5: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மாணவ,மாணவியர்கள் குடுமியான்மலை கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளிமாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
பேரணி கல்லூரி முதல்வர் முனைவர் சிவசுப்ரமணியம் வழிகாட்டுதலின் பேரில் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் சுகன்யாகண்ணா முன்னிலையில் நடைபெற்றது.
பேரணியில் வேளாண்மைக் கல்லூரி மாணவ,மாணவியர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தவாறு பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்,சுற்றுச் சூழலைக் காப்போம் என்ற கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
பின்னர் கல்லூரி மாணவர்கள் லோகேஷ்,குமார் மற்றும் மனோஜ்குமார் ஆகியோர் பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதன்பின்பு குடுமியான்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீயவிளைவுகள் குறித்தும்,மாற்று வழிகள் குறித்தும் பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்கள்.
பேரணியில் வேளாண்மைக்கல்லூரியில் பயிலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ,மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..
பேரணியை குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரியில் தொடங்கிய மாணவ,மாணவியர்கள் குடுமியான்மலை பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடந்தனர்.