மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க நெறி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:3ம் பருவ தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளிகளுக்கு சென்றுவிட்டன. நவீன முறையில் கல்வி போதிக்கும் வகையில் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு லேப்-டாப் வழங்க அரசிடம் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கியதும், லேப்டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2013ம் ஆண்டுக்குப்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். தற்போது எல்கேஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது. அப்போது, நடுநிலை பள்ளிகளுக்கு கீழ் உள்ள ஆசிரியர்கள் அங்கு பணி செய்யும்போது அவர்களை கொண்டு ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படும். எல்கேஜி., வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்கும் வகையில், நீதி நெறி வகுப்புகளும், அதற்கான பயிற்சியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், சிறந்த பெற்றோர்கள், பயிற்றுனர்கள் மூலம் மாணவர்களுக்கு அனுபவம் பகிரப்பட்டு பயிற்சி வழங்கப்படும். தமிழகத்தில் அட்டல் லேப் (அதிநவீன ஆய்வகம்) 70 பள்ளிகளில் அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் மீதமுள்ள 621 பள்ளிகளில் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்