ஜாக்டோ - ஜியோவின் போராட்டத்தில் கைதாகி, 'சஸ்பெண்ட்' ஆன ஆசிரியர்களை, மீண்டும் பணியில் சேர்க்க, பள்ளி கல்வி துறை
உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், ஜன., 22 முதல், 30 வரை காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடந்தது. இதில், அரசு அனுமதியின்றி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்தனர்.கைதானவர்களில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஊழியர் சங்கத்தினர் இடம் பெற்றனர். அவர்களில், ஆசிரியர்களை கணக்கெடுத்து, 1,500க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களை, நிபந்தனையின் அடிப்படையில் பணியில் சேர்த்து கொள்ள, பள்ளி கல்வி துறை, நேற்று உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் கைதாகி, காவலில் வைக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களை, அவர்கள் மீது எடுக்கப்பட உள்ள, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு, மீண்டும் பணி அமர்த்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தற்போது, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, செய்முறை தேர்வுகள் மற்றும் பொது தேர்வு நடத்தப்படும் நிலையில், மாணவர் நலன் கருதி, இந்த முடிவை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Join Whats App Group Link -Click Here