சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் எண்ணம்,வாக்கு,செயல்களில் தூய்மை உடையவர்கள்.விராலிமலையில் நடந்த சாரண சாரணிய இயக்க பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.





விராலிமலை,பிப்.18: இலுப்பூர் கல்வி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சாரண ஆசிரியர்கள் மற்றும் சாரணிய வழிகாட்டித் தலைவிகளுக்கான  ஒரு நாள் பொதுத்தகவல் பயிற்சி முகாம் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை வகித்து  சாரண சாரணிய இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை ஆணையரும் முதன்மைக்கல்வி அலுவலருமான இரா. வனஜா பேசியதாவது:
சாரண இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள் நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிரதி பலன் கருதாமல் பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குவதாகும்.
மேலும் இது, உற்று நோக்குதல், அறிவுத் திறனை வளர்த்தல், கைவினைப் பொருள்கள் செய்தல் போன்ற இதர திறமைகளையும் வளர்க்கிறது.
சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், மாறாப் பற்றுடையவர்களாகவும், மரியாதை உடையவர்களாகவும், பிறரைச் சகோதரர்களாக நேசிக்கும் பண்புடையவர்களாகவும், இயற்கையை நேசிப்பவர்களாகவும், விலங்குகளிடம் அன்பு காட்டுபவர்களாகவும், கட்டுப்பாடு உடையவர்களாகவும், பொதுவுடமைகளைப் பாதுகாப்பவராகவும், சிக்கனமானவர்களாகவும், எண்ணம், வாக்கு, செயல்களில் தூய்மை உடையவர்களாகவும் விளங்குவார்கள்.
சாரண, சாரணியர்களுக்குப் பல்வேறு வகையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அவற்றில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதை மாணவர்கள் அனைவரும் பெற வேண்டும் என்றார்.





இலுப்பூர் கல்விமாவட்ட முதன்மைஆணையரும் ,மாவட்ட கல்வி அலுவலருமான க.குணசேகரன் முன்னிலை வகித்தார்.இலுப்பூர் கல்வி மாவட்ட  சாரண சாரணிய இயக்கத்தின் தலைவர் முனைவர்.இரா.சின்னத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாரண ஆசிரியர்களுக்கு சாரண இயக்கத்தின் மூலமாக மாணவர்களுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறையும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் விதமாகவும்,தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாகவும் மாணவர்களை வழிநடத்த அறிவுரை வழங்கினார்.

விழாவில் சாரண சாரணிய இயக்கத்தின் இலுப்பூர் கல்வி மாவட்ட பொருளாளர் முனைவர் இரா.சிவக்குமார்,மாவட்ட சாரண ஆணையர் மு.மாரிமுத்து,மாவட்ட சாரணிய ஆணையர் கோ.ஜெயந்தி ,மாவட்ட துணைத்தலைவர் ரெ.சுரேஷ் ,மாவட்ட செயலாளர் சி.கந்தசாமி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஒருநாள் கருத்தரங்கினை மாவட்ட பயிற்சி ஆணையர் அந்தோணிசாமி,மாவட்ட அமைப்பு ஆணையர் செந்தில்முருகன்,மாவட்ட சாரணிய அமைப்பு ஆணையர் சசிகலா,புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சிவராஜா ஆகியோர் வழிநடத்தினார்கள்.

கருத்தரங்கில் மாநில ஆளுநர் விருதுக்கு உண்டான விண்ணப்பங்கள் வழங்கி மாணவர்களை தயார் செய்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

முன்னதாக காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Join Whats App Group Link -Click Here