வரும், 2019 - 20 நிதியாண்டுக்கான, மத்திய பட்ஜெட்டை, இடைக்கால நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, பியுஷ் கோயல், இன்று தாக்கல் செய்ய உள்ளார். '

இது இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், சில சலுகைகள், அறிவிப்பு கள் வெளியாகும்' என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது.

வரும், ஏப்ரல் - மே மாதங்களில், லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், 2019 - 20 நிதியாண்டுக்கான, மத்திய பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களாக, பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட, நிதி அமைச்சராக இருந்த, அருண் ஜெட்லி, சிகிச்சைக்காக, அமெரிக்கா சென்றுள்ளார்.

அதனால், இடைக்கால நிதி அமைச்சராக, மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.'இந்த அரசின் கடைசி பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும், விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், சில முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

.சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்து, எதிர்க்கட்சி கள் பிரசாரம் செய்தன.

 அதனால், மூன்று மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியை இழக்க நேரிட்டது.அதனால், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், வேளாண் துறை தொடர்பான, பல அறிவிப்புகள் வெளியாகும் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது

.விவசாயிகளுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டம்; உணவு மானியத்துக்காக, 1.8 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு; பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் ரத்து; முறையாக கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு, வட்டி ரத்து போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம்.

தங்கத்தின் மீதான வரி குறைப்பு, சுகாதார துறைக்கான ஒதுக்கீட்டை உயர்த்துதல் போன்ற அறிவிப்புளை எதிர்பார்க்கலாம்.

 நடுத்தர வருவாய் மக்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு, வருமான வரிச் சலுகை அறிவிப்பும் வெளியாகலாம்.

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில், 4,000 கோடி ரூபாய் முதலீடு; ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய்க்கு குறைவாக வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு, கடன் வட்டியில் சலுகை போன்றவை அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது