தேர்வுகளில் மோசடிகளை தடுக்க, விடைத் தாள்களில், 'பார் கோடு' எனப்படும், ரகசிய குறியீட்டு முறையை அறிமுகம் செய்யலாம்' என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவுக்கு, நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.உயர்கல்வி முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்க, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு, நிபுணர் குழுவை அமைத்துள்ளது.ராஜஸ்தான், மத்திய பல்கலை முன்னாள் துணைவேந்தர், எம்.எம்.சலுங்கே தலைமையிலான, ஒன்பது பேர் குழு, தன் பரிந்துரையை சமீபத்தில் சமர்ப்பித்தது.யு.ஜி.சி., உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:இளங்கலை, முதுகலை, எம்.பில்., -- பிஎச்.டி., படிப்புகளுக்கான, தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும்.தற்போது, பொருள் தெரியாமல் படிப்பதை மாற்றி, பாடத்தின் பொருள் அறிந்து படிக்கும் வகையில், தேர்வு முறை மாற்றப்பட வேண்டும்.மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனை சோதிக்கும் வகையில், உள் மதிப்பீடு மற்றும் தேர்வு முறை என, இரண்டு பிரிவாக தேர்வு முறையை பிரிக்க வேண்டும்.மாணவர்களின் கற்கும் திறனை வளர்க்கும் வகையில், கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்வதற்காக, மாதிரிகளை உருவாக்க வேண்டும். தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில், விடைத்தாள்களில், மாணவரின் வரிசை எண்ணுக்கு பதில், 'பார் கோடு' எனப்படும், ரகசிய குறியீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.