JACTO_GEO_10


தமிழகத்தில் தற்போது வலுத்து வரும் ஜாக்டோ ஜியோ போராட்டமானது இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்வு விகிதத்தைப் பாதிக்காதா? இந்தப் போராட்டம் நியாயமான போராட்டமில்லை, மிக மிக அநியாயம் என்று பொதுவான கூக்குரலை அனேக இடங்களில் கேட்க முடிகிறது. இதைக் குறித்து தற்போது அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

பெற்றோர்களில் சிலர் ஆசிரியர்கள் தரும் விளக்கத்தை ஏற்று அவர்களது போராட்டத்திற்காக நியாயமான காரணத்தை உணர்ந்து கொள்வதாகவும், கட்சி சார்புடைய பெற்றோர்களில் சிலர் மட்டும் ஆசிரியர்கள் பணிக்கு வராத அரசுப் பள்ளிகளின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கான அடிப்படை காரணமாக இதுவரையில் ஊடகங்களில் பெரிதுபடுத்தப் பட்டு வருவது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு விஷயம் தான். ஊடகங்களில் புதிய பென்சன் ஸ்கீம் குறித்தும் அதற்கு ஆசிரியர்கள் உடன்படாத நிலை குறித்தும் செய்திகள் வெளிவந்த போதும் அதற்கான போதிய விளக்கம் அளிக்கப்படாததால் பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர்களின் போராட்டம் என்பது ஊதிய உயர்வுக்காக மட்டுமே என்பதாகத் தான் இதுவரையில் பதிவாகியுள்ளது. அதனால் தான் ஆசிரியர்கள் தரப்பு நியாயம் என்பது பொதுமக்களால் உணரப்படாத அளவில் சிக்கலானதாக திட்டமிட்டு மாற்றப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் கூட்டமைப்பினர் கருதுகின்றனர்.
உண்மையில் இந்தப் போராட்டத்துக்கான அடிப்படைக் காரணம், தமிழக அரசு பழைய பென்சன் ஸ்கீமை ரத்து செய்து புதிய விதமான காண்ட்ரிபியூட்ரி பென்சன் ஸ்கீம் (CPS) நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த விஷயத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்மதமில்லை என்பதும்;
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை பெருவாரியாகக் குறைந்து கொண்டே வருவதால் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. முன்பு 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றிருந்த நிலை மாறி தற்போது 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போதும் என்ற நிலைக்கு அரசு தனது நிலைப்பாட்டைத் தளர்த்தியதில் தன்னியல்பாக ஆசிரியர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு குறைகிறது. இதனால் பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு வேலைப்பளு உயர்கிறது. இதில் ஆசிரியப் பெருமக்களுக்கு உடன்பாடில்லை என்பதுமே தான்.

அதைத்தாண்டி ஒப்பந்த ஆசிரியர் நியமனத்தில் ஆசிரியரானவர்கள் தங்களுக்கான ஊதியம் போதவில்லை என்று நினைப்பதால் அதற்காகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராடுகிறது.

ஜாக்டோ என்பது ஆசிரியப் பெருமக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தர ஒருங்கிணைந்துள்ள அமைப்பு, ஜியோ என்பது இதர அரசு ஊழியர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதற்காக ஒருங்கிணைந்துள்ள அமைப்பு.
அதெல்லாம் சரி தான். ஆனால், இந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டமென்பது  சில வருடங்களாக அன்று பெய்த மழை போல அவ்வப்போது தீவிரமாகி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை பேரணி நடத்தி தடியடி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது நடவடிக்கை என்ற களேபரத்துக்குப் பிறகு களைவது என்கிற ரீதியில் தானே சென்று கொண்டிருந்தது. ஆனால்... திடீரென்று இப்போதென்ன 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் கை வைப்பதைப் போல அநியாயமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இதெல்லாம் அநியாயமில்லையோ?! என்று ஒட்டுமொத்த தமிழகமும் இப்போது ஆசிரியர்களைப் பழிக்கிறதே? இதற்கு போராட்டத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் பதில் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் அளிப்பதற்கு புதிய சி பிஎஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கான காரணமாக அரசுத்தரப்பில் கூறப்பட்ட விளக்கம். இந்த சி பி எஸ் ஸ்கீம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் நஷ்டமில்லாததாக இருக்கும் என்பதே. ஆனால், அதன் பிறகான காலகட்டங்களில் தான் தமிழக அரசு எம் எம் ஏ , எம் பிக்களுக்கான சம்பள உயர்வை அறிவித்தது. அவர்களுக்கான சம்பள விகிதத்தில் 100 % உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் பார்வையில் அதன் அனைத்துக் குடிமக்களும் ஒன்று தானே? அதென்ன ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு கணக்கில் எம் எல் ஏ க்களுக்கான சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தில் மட்டும் நியாயம் செய்து விட்டு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டது எந்த விதத்தில் நியாயம்?
இது ஆசிரியர்களுக்கான தனிப்பட்ட போராட்டமல்ல. அதுமட்டுமல்ல இது ஊதிய உயர்வுக்கான போராட்டமுமல்ல, ஊதியக்குழு நிர்ணயித்த ஊதியம் 21 மாதங்களாக அவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. நிலுவையில் இருக்கும் அந்த ஊதியத் தொகையைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். அதைக் கேட்பதற்கான உரிமையும், கிடைக்காத பட்சத்தில் போராடி அதைப் பெறுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. அதைத் தவறு என்று சொல்ல முடியுமா?  அதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தமிழக அரசிடம், எங்களுக்கு பழைய ஊய்வூதியத் தொகையையே திரும்பத் தாருங்கள், புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம் என்கிறார்கள். காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட அந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத் தான் இருந்தது. ஆனால் அவரது மறைவின் பின் அவரது பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் அதை நடைமுறைப்படுத்தப் படும் போது அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் மற்றும் முறைகேடுகள். இதையொட்டித்தான் 2017 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் துவங்கியது. அப்போது போராட்டத்தில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றக் கிளை, ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒத்தி வைக்கச் சொன்னது. நீதிமன்ற உத்தரவை ஏற்று போராட்டம் நிறுத்தப்பட்டு அரசு தரப்பு விளக்கம் பெறப்பட்டது. அதில் போராட்டம் தீர்வல்ல, அரசு தரப்பு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட போது இரு தரப்புக்கும் சமாதானமான உடன்பாடு எதையும் எட்ட முடியவில்லை.

அரசு தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு சமர்பிக்கப்பட்ட சீலிடப்பட்ட உறையிலான அறிக்கையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகளுக்கு சாதகமாக எந்தப் பதிலும் இல்லாது போனதால் உயர்நீதிமன்ற உத்தரவை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போராட்டங்கள் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கின. இதையொட்டி கடந்தாண்டு 2018 செப்டம்பர் மாத இறுதிக்குள் மீண்டும் ஜாக்டோ ஜியோ போராட்டம் வெடிக்காதிருக்க ஆவண செய்யுமாறும், பேச்சு வார்த்தை மூலமாக அரசு தரப்பும், ஜாக்டோ ஜியோவும் சாதகமான தீர்வை எட்டுமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கும் போதிய பலன் கிடைக்காத காரணத்தால். நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு தாண்டி 2019 ஜனவரி முதல் மீண்டும் இப்போதைய போராட்டம் அதன் உச்சத்தை எட்டியுள்ளது.
அது மட்டுமல்ல,

எங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம். புதிய ஊய்வூதியத் திட்டமே போதும் என்று சொல்லி ஆசிரியரானவர்களில் சுமார் 6000 பேர் தற்போது பணி ஓய்வடைந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு கூட பென்சன் என்ற பெயரில் 10 பைசா கூட இதுவரை வழங்கப்படவில்லை. சிலருக்கு ஆண்டுக்கணக்காக நீதிமன்றத்தை அணுகிப் போராடிய பின் செட்டில்மெண்ட் தொகை மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. விஷயம் இப்படி இருக்க ஊடகங்கள் ஆசிரியர்களுக்கு மாணவர் நலனில் அக்கறை இல்லை என்று எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் நெய்யை ஊற்றினால் என்ன செய்வது?

என்கிறார்கள் போராட்டக் களத்தில் இருக்கும் ஆசிரியர்கள்.
அரசு ஊழியர்கள் போராட்டமென்றாலே அது ஜாக்டோ ஜியோ போராட்டமாகவே இதுவரை இருந்த நிலை மாறி, தற்போது இவ்விஷயத்தில் ஜாக்டோ ஜியோ அல்லாது அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பினரும் இன்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி 30.01.2019 அன்று அவர்களது கூட்டமைப்பும் 1 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் போராட்ட அறிவிப்பு!
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்;
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் மற்றும் சி மற்றும் டி பிரிவு தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் பிரிவு ஆகியவற்றின் மாநில மையச் சங்கம் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுனர் சங்கங்கள் ஆகிய அனைத்து அமைப்புகளும் இணைந்து தமிழக முதல்வர் அவர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கைகள் வைத்திருந்தோம். ஆனால் இதுவரை எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. எனவே அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு சங்கங்களும் ஒன்றிணைந்து 1.4 2004 க்குக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துமாறும், 7 வது ஊதியக் குழுவால் அறிவிக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டுமென்றும்  அரசாணை எண் 56 ஐ ரத்து செய்யவேண்டும் என்றும். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அத்தனை பேரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்குமாறு கோரியும் ஒருநாள் முழுதும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றும் ஒருவேளை அரசு எங்களது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு செவி சாய்க்கவில்லை என்றால் மீண்டும் 31.1.2019 அன்று அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளோம் என்றும்
அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பில் அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்புகளும் சரி அங்கீகாரம் பெறாத அமைப்புகளும் சரி இரண்டிலுமே கோரிக்கைகள் என்னவோ ஒன்றாகவே இருக்கின்றன... அரசு தான் செவு சாய்க்கக் காணோம்.

இடையில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது  அரசுப் பள்ளிகளில் பயின்று கொண்டிருக்கும் லட்சோபலட்சம் ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்காலம் தான், இதில் யாரைக் குற்றவாளியாக்குவது?
தற்போதைய நிலையில் தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பேச்சு வார்த்தை அழைத்து அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்த்தால் போராட்டத்தை கைவிடுவதாக இவ்விரு அமைப்புகளும் அறிவித்த்திருந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென நீதிமன்றப் பரிந்துரையை ஏற்று ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதற்குக் காரணமாக அவர்கள் தெரிவித்திருப்பது அரசுப் பள்ளிகளை நம்பி இருக்கும் 10 மற்றூம் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்கள் பாதிப்படையக் கூடாது என்பதைத் தான்.

இம்முறையாவது தமிழக அரசு ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் தொடர் போராட்டத்துக்கு நிரந்தரமாக ஒரு முற்றுப்புள்ளியை வைக்குமா? அல்லது இந்தப் போராட்டங்களுக்கான ஆயுளை தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின் மீண்டும் நீட்டிக்கச் செய்யுமா என்று தெரியவில்லை


Whats App Group link