missan-sakthi


விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை  (மிஷன் சக்தி திட்டம்) வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம், இந்த வல்லமையைக் கொண்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
மிஷன் சக்தி திட்டமானது, ஒடிஸா மாநிலம், அப்துல் கலாம் தீவிலிருந்து புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையாகும். அதன்படி, புவியிலிருந்து 300 கிமீ தொலைவிலுள்ள செயற்கைக்கோள் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
முதல் முறையாக...: விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை, கடந்த 1959-ஆம் ஆண்டில் முதல் முறையாக பரிசோதித்தது அமெரிக்கா. இதேபோன்ற சோதனையை, கடந்த 1964-ஆம் ஆண்டில் அப்போதைய சோவியத் யூனியன் மேற்கொண்டது. 1985-ஆம் ஆண்டில் பனிப்போர் காலக்கட்டத்தில், தனது விண்வெளி தொழில்நுட்பங்களை அமெரிக்கா தீவிரமாக மேம்படுத்தியது. அப்போது மீண்டும் செயற்கைக்கோள் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பரிசோதித்த அமெரிக்கா, தன்னுடைய பி-781 செயற்கைக்கோளை அழித்தது.
அண்டை நாடான சீனா, கடந்த 2007-ஆம் ஆண்டில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்தது. அதன்படி, பூமியிலிருந்து 865 கிமீ தொலைவிலிருந்த தனது செயற்கைக்கோள் ஒன்றை அந்நாடு தாக்கி அழித்தது. கடைசியாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் புதிய வகை ஏவுகணையின் மூலம் செயற்கைக்கோள் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை ரஷியா பரிசோதித்தது. மிக்-31 ரக போர் விமானத்திலிருந்து இச்சோதனை நடத்தப்பட்டது.
மேற்கண்ட மூன்று நாடுகளையும் பொருத்தவரை, தரையிலிருந்து மட்டுமன்றி போர்க்கப்பல், போர் விமானங்களில் இருந்தும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை செலுத்தும் வல்லமையை கொண்டுள்ளன. தற்போதைய நிலையில், தரையிலிருந்து செலுத்தக்கூடிய திறன் இந்தியாவிடம் உள்ளது.
போர்க்கால பயன்பாடு: போர்க்காலங்களில் எதிரி நாட்டின் தொலைதொடர்பு அல்லது ராணுவ செயற்கைக்கோள்களை வீழ்த்துவதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். இதன் மூலம் எதிரி நாட்டின் ராணுவ வீரர்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுவதால், அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த முடியும். மேலும், எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களிலிருந்து முக்கியமான தகவல்களையும் சேகரிக்க முடியும்.
அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள், தங்களுடைய செயலிழந்த செயற்கைக்கோள்களை மட்டுமே இதுவரை சுட்டு வீழ்த்தியுள்ளன. தங்களது ராணுவ வல்லமையை காட்டுவதற்காக இத்தகைய சோதனைகளை நடத்தியுள்ளன. வேறு நாட்டுடனான போரின்போது, இந்த தொழில்நுட்பத்தை அவை பயன்படுத்தியதில்லை.
சர்வதேச விதிமீறலா?
விண்வெளி பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. விண்வெளியில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது என்ற கடந்த 1967ஆம் ஆண்டைய சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதேசமயம், தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனை, எந்த சர்வதேச சட்டங்களையும் மீறவில்லை என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இது எந்த நாட்டுக்கும் எதிரான சோதனை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால்களை எதிர்கொள்ள தேவைப்படுகிறது
அண்டை நாடான சீனாவிடம் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளன. கடந்த 2007-ஆம் ஆண்டில் புவி தாழ் வட்ட பாதையில் 865 கிமீ தொலைவில் செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தி, அந்த நாடு வெற்றிகரமாக சோதனை நடத்தியது. பெருகி வரும் தொழில்நுட்பங்களால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு, இந்தியாவுக்கு இத்தகைய ஏவுகணைகள் மிகவும் அவசியம் என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக விண்வெளி தொழில்நுட்பத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி, கண்காணிப்பு என பல்வேறு பயன்பாடுகளுக்காக விண்வெளி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முதுகெலும்பாக உள்ளன.
இந்நிலையில், தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனை, விண்வெளியில் ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமில்லை என்று இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது. மேலும், விண்வெளியை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இந்தியா கூறியிருக்கிறது.
ஒவ்வொரு நாடும் அமைதியை கடைப்பிடிக்கும்: சீனா நம்பிக்கை
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை, இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ள நிலையில், விண்வெளியில் ஒவ்வொரு நாடும் அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்கும் என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், இந்த செய்திகள் எங்களுக்கு தெரியவந்தன. விண்வெளியில் ஒவ்வொரு நாடும் அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, செயற்கைகோளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை கடந்த 2007-ஆம் ஆண்டில் சீனா சோதனை செய்தது. தங்கள் நாட்டின் செயல்திறன் நிறைவுற்ற செயற்கைகோள் ஒன்றை ஏவுகணை மூலமாக சீனா வீழ்த்தியது.
பாகிஸ்தான் கருத்து: செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை மேற்கொள்வது விண்வெளிப் பகுதியை ராணுவமயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவின் பெயரை அவர்கள் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
விண்வெளி என்பது மனிதகுலத்துக்கான பொதுவான தளம் ஆகும். அதை ராணுவமயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கான பொறுப்பு இருக்கிறது. விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடை செய்வதற்கான ஐ.நா.வின் தீர்மானத்துக்கு பலமான ஆதரவாளராக பாகிஸ்தான் இருக்கிறது.
செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை, இதற்கு முன் சோதனை செய்யப்பட்ட தருணங்களில், அதை வன்மையாகக் கண்டித்த நாடுகள், தற்போது விண்வெளி தளத்திற்கு ஏற்படக் கூடிய ராணுவ அச்சுறுத்தலை  தடுத்து நிறுத்துவதற்கான சர்வதேச நெறிமுறைகளை முன்னெடுக்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here