தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 1,199 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 14 பள்ளிகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 48 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, கே.வி.சங்கதன் என்ற கேந்திரிய வித்யாலய ஆணையரகம் மூலமாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது.
இந்தப் பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நிகழாண்டு ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 19-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் kvsonlineadmission.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 9 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவர்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு அந்த மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கப்படும். ஏப்.30 வரை சேர்க்கை நடைபெறும்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here