ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் டெட்'  எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட்' தேர்வு 2 தாள் கொண்டது. தலா 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆரம்பக் கல்வி வகுப்புகள் வரையும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும்.
இந்நிலையில் நிகழாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தற்போது தேர்வர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேதி, காலிப் பணியிடம், பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் இம்மாதம் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.