சென்னை: 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை விளம்பர நோக்கத்தில் பள்ளிகள் பயன்படுத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. மாணவர்களின் மதிப்பெண்களை பிரதானப்படுத்தி விளம்பரத்தை தேடாதீர்கள் என காட்டமாக கூறியுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க கூடாது. குறிப்பாக தனியார் பள்ளிகள் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை வைத்து விளம்பரப்படுத்த கூடாது என கூறியுள்ளது
ஏற்கனவே இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு வெளியிட்ட உத்தரவிற்கு எதிராக செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி விளம்பரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு மன அழுத்தம் தரக்கூடாது என்ற நோக்கில் தான் ரேங்க் முறையே ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் வகையில், பள்ளிகள் விளம்பர நோக்கத்தோடு செயல்பட கூடாது எனவும் கூறியுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் உரிய அறிவுரை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறும் மாணவர்களை வைத்து, அந்தந்த பள்ளிகள் விளம்பரம் தேடிக் கொள்வது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படத்துடன் விளம்பர பேனர்களை வைத்து, தங்களுக்கான விளம்பரத்தை தேடிக்கொள்ளும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை கடுமையாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here