கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலையில் ஜி.டி. நாயுடு அருங்காட்சியகம் உள்ளது. இவை ஜி.டி. அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விலை மதிப்புள்ள சுமார் 60 பழங்காலக் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு பெரியார் ஈ.வெ.ரா. தனது சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் ஜி.டி. நாயுடுவின் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து பழனிக்கு இயக்கி வந்த ஒரு பேருந்தும் இடம் பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளில் 1886-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட பென்ஸ் மோட்டார் வேகான் கார், நவீன கால பந்தயக் கார் என மிகப்பெரிய மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கார்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இங்கு உள்ள கார்கள் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இவைகள் ஜி.டி.நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரால் வாங்கிச் சேகரிக்கப்பட்டவை.
ஜி.டி நாயுடு அருங்காட்சியகம் என பெயர்வர கரணம் என்ன, பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த ஜி,டி நாயுடு யார் என்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்…….
இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடு கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில், 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பிறந்தார். தொடக்க கல்வி மட்டுமே படித்திருந்த இவர், பல நூல்களை படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவருக்கு தனியாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதிலிருந்தே இருந்தது. இவர் முதன் முதலில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து, தமிழகத்தில் விற்று லாபம் கண்டார். ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பைக்கை வாங்கி அதை நன்கு ஆராய்ந்து மெக்கானிக் வேலையையும் கற்றுகொண்டார். பிறகு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் கொஞ்ச காலம் வேலை பார்த்த ஜி.டி.நாயுடு அதன்பிறகு, நண்பர்களிடம் கடன் வாங்கி திருப்பூருக்குச் சென்று பருத்தித் தொழில் செய்தார். மற்றவர்களோடு போட்டி போட்டுகொண்டு தொழிலை செய்யமுடியாமல் எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டது.
பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு ஒரு பேருந்தை கடனாக வாங்கி முதன் முதலில் பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார். அதன்பின்பு யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கினார். முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வரும் மற்றும் புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அதை பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா எனக் கண்டுபிடிக்க அதிர்வு சோதிப்பான் என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அசத்தினார் ஜி.டி.நாயுடு. இதுமட்டும்மல்ல புகைப்படக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க உதவும் ஒரு கருவி, ஓட்டுப்பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் மின்விசிறி, இரும்புச் சட்டத்தில் உள்ள வெடிப்புகளைக் கண்டறியும் கருவி, விநோத உருவம் காட்டும் கண்ணாடி தகடுகள், நுணுக்கமாக அளவிடும் கருவி, காசைப் போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் என ஏராளமானவற்றை கண்டுபிடித்தார்.
1952 ஆம் ஆண்டிலேயே வெறும் 70 ரூபாய் விலையில் ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோவையும் கண்டுபிடித்தார். அதே போல வெட்டுக் காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார். ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர், இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார். நீரிழிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தும் தயாரித்தார். அந்த காலத்திலேயே நானோ கார் ரகங்கள் அதிக மைல் ஓடக்கூடிய டயர்கள், மெசின் டூல்கள் என அவரது கண்டுபிடிப்புகள் வளர்ந்து கொண்டே சென்றன. ஜி.டி நாயுடு தொழிலில் மட்டும் மல்ல விவசாயத்திலும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
ஜி.டி.நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமையை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டது. ஆனால் ஜி.டி நாயுடு அதற்கு ஒத்துகொள்ளவில்லை. ஏனென்றால் தானே தயாரிக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் அவருடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆங்கிலேய அரசின் அதிக பட்ச வரியால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன. பிறகு 10 லட்சம் ரூபாய் கொடுக்க ஓர் அமெரிக்க நிறுவனம் முன்வந்த போது, பணத்தை வாங்கிக் கொள்ளாமல் தனது கண்டுபிடிப்புக்கான உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.
ஆங்கிலேய அரசு தான் இப்படி என்றால் சுதந்திரத்துக்குப் பிறகும், மத்திய அரசு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கவில்லை. வெறுத்துப்போன ஜி.டி.நாயுடு, 1953 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் முன்னிலையில் கண்டுபிடித்த ரேடியோக்களையும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து நொறுக்கினார். அந்த காலத்திலேயே அரசு அவருக்கு ஒத்துழைத்திருந்தால், கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் நம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல், இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிக்கை விட்டார். தன்னுடைய கருவிகள்,போக்குவரத்து நிறுவனங்கள், தொழில் கல்வி, தனது கண்டுபிடுப்புகள் அனைத்தும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார்.
தன்னுடைய சுயமுயற்சியால் தொடங்கிய பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிதான் கோயம்புத்தூரில் GCT என அழைக்கப்படும் அரசினர் தொழில்நுட்ப கல்லூரி. பல அரிய கண்டுபிடிப்புகளை தந்த ஜி.டி.நாயுடு அவர்கள் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி அவருடைய 80 ஆவது வயதில் காலமானார். ஆக சிறந்த பல தலைவர்களால் போற்றப்பட்ட ஜி.டி நாயுடு, மேற்கண்ட கண்டுபிடிப்புகளை விட என்னால் முழுமையாக தெரியபடுத்த முடியாத கண்டுபிடிப்புகள் ஏராளம் உள்ளன. சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் கோவை அவிநாசி சாலையில் ஜி.டி கண்காட்சி மற்றும் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..