தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் (2019-20) புதிதாக 15 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் 78 புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் குறைந்தபட்சம் 5 பொறியியல் கல்லூரிகள் முதல் அதிகபட்சம் 20 கல்லூரிகள் வரை மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தி வந்தன. 100-க்கும் அதிகமான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை பாதியாகக் குறைத்தன.
இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிலிருந்து  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக அளவில் பணிகள் வர ஆரம்பித்தன. இதனால், இந்த நிறுவனங்களில் மீண்டும் பணிவாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் கணினி சார்ந்த பொறியியல் படிப்பு இடங்களை கடந்த ஆண்டு முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. புதிய பொறியியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதேபோல், 2019-20-ஆம் கல்வியாண்டிலும் புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க ஏராளமான விண்ணப்பங்கள் ஏஐசிடிஇ-யிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
அதனடிப்படையில், நாடு முழுவதும் புதிதாக 78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதியளித்து அதற்கான அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 3,047 ஆகவும், மொத்த பி.இ., பி.டெக். இடங்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 26,392 ஆகவும் உயர்ந்துள்ளன.
இதில் தமிழகத்தில் மட்டும் 15 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், தமிழகத்திலுள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 518 ஆகவும், மொத்த பி.இ., பி.டெக். இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 79,507 ஆகவும் உள்ளன.
ஏற்கெனவே, தமிழகத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற அண்ணா பல்கலைக் கழகத்திடம் 22 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்காத நிலையில், புதிதாக 15 பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here