தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டு அளவுக்குக் குறைவான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் குழந்தைகளுக்கான சேர்க்கை உத்தரவு
வெள்ளிக்கிழமை வழங்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ்  இலவச சேர்க்கைக்காக கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  அவற்றில் போதிய தகுதிகள் இல்லாததால் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மீதமுள்ள 1.13 லட்சம் விண்ணப்பங்கள் நிகழாண்டு சேர்க்கைக்காக பரிசீலிக்கப்பட்டன.
சிறப்புப் பிரிவினரின் குழந்தைகளுக்கு... வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவில் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடைபெறுவதற்கு முன்னர் முதன்மைக் கல்வி அலுவலர்களால் மே 31-ஆம் தேதிக்குள் சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.  இந்தப் பிரிவில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத்  தொழிலாளிகளின் குழந்தைகள், ஹெச்.ஐ.வி-யினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் போன்றோர் இடம்பெறுவர்.
25 சதவீத இட ஒதுக்கீட்டை விட குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் அனைத்து பிரிவினைச் சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பள்ளியில் சேர மே 31-ஆம் தேதியன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சேர்க்கை உத்தரவு வழங்கப்பட வேண்டும்.
சான்றிதழ்களைச் சரிபார்த்து... சேர்க்கை உத்தரவு  பெறப்பட்டவுடன் பெற்றோர் அவர்கள் குழந்தைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் சேர்க்கை செய்யப்பட வேண்டும்.  பள்ளி முதல்வர்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்று,  இருப்பிடச் சான்று,  ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் சிறப்புப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளாக இருப்பின் அதற்கான உரிய சான்றினை பெற்று சரிபார்த்து அனைத்துச் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதி செய்து குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். உரிய சான்றுகள் இல்லாமல் எந்தக்காரணம் கொண்டும் பள்ளியில் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என அதில் கூறியுள்ளார்.
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெறும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை எந்தவிதமான கல்விக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. அவர்களுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் செலுத்தப்படும்.

ஜூன் 6-ஆம் தேதி குலுக்கல்
தனியார் பள்ளிகளில்  25 சதவீத ஒதுக்கீட்டை விட அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில்,  தகுதியான குழந்தைகள் வரும் ஜூன் 6-ஆம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அன்றை தினம்  25 சதவீத இடங்களுக்கான தெரிவும்,  ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்களுக்கான காத்திருப்பு பட்டியல் தெரிவும் மேற்கொள்ளப்படவுள்ளது.  குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பெயர் பட்டியல் மற்றும் காத்திருப்புப் பெயர் பட்டியலில் குலுக்கலின்போது இருந்த ஆய்வு அலுவலர்,  பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது பள்ளியின் முதல்வர்,  குறைந்தபட்சம் இரண்டு பெற்றோர் கையொப்பமிட வேண்டும்.
குலுக்கல் மூலம் சேர்க்கைக்காக தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பெயர் பட்டியல் மற்றும் காத்திருப்புப் பட்டியல் குலுக்கல் நடைபெற்ற அன்றே பள்ளி நிர்வாகத்தால் பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும். பெற்றோரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பட்டியலை பள்ளியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here