பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நெல் ஜெயராமனின் குறிப்புகள் பிளஸ் 2  தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில்,  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில்  நெல் ஜெயராமனின் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.  
திருவாரூர் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்  விவசாயி நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடரான இவர், 174 அரிய நெல் வகைகளை மீட்டெடுத்ததுடன், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து பாதுகாத்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  நெல் ஜெயராமன்  கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில்,  பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் நாமன் போலக், எம்.எஸ்.சுவாமிநாதன், நெல் ஜெயராமன் ஆகியோர் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.  
அதில் நெல் ஜெயராமன் 2005- ஆம் ஆண்டு முதல் தன் பண்ணையில் நெல் விதைத் திருவிழா நடத்தியது, 2016 -இல் ஆதிரங்கத்தில் நடைபெற்ற நெல் விதைத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்றது, அப்போது, 156 வகையான பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது ஆகியவை  குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர, நெல் ஜெயராமன் 2011- இல் சிறந்த விவசாயிக்கான மாநில விருது பெற்றது, 2015 -ஆம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருது பெற்றது போன்ற தகவல்களும் பாடநூலில் இடம்பெற்றுள்ளன.  
இதைத் தொடர்ந்து, நெல் ஜெயராமனின் மனைவி சித்ரா,  அவரது மகன் ராஜீவ் ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here