நல்ல கல்வியை கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும்தெய்வங்கள் என்று செய்யாறு அருகே அரசு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இந்த 100 சதவீத தேர்ச்சியை பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுவிழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட கல்வி அலுவலர் பி.பொய்யாமொழி, பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி முன்னிலை வகித்தனர். விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் பேசியதாவது:நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்ட குறுகிய காலத்தில், பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்கள் நிஜ ஹீரோக்கள், ஹீரோயின்கள். 100 சதவீதம் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களை வணங்குகின்றேன். உங்களை வேலை வாங்காமலும், வேலைக்கு அனுப்பாமலும் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு தலை வணங்குகின்றேன். நான் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு இந்த ஊரும், இந்தபள்ளியும் தான் காரணம். நல்ல கல்வியை எனக்கு கொடுக்காமல் விட்டிருந்தால் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. நல்ல கல்வியை கற்று கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்களாக திகழ்கின்றார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக, நீதிபதிகளாக, ஏன்நல்ல அரசியல்வாதிகளாக கூட வரலாம்.

 தமிழ்மொழியும், ஆங்கில அறிவும் நமது இரண்டு கண்களாகும். மருத்துவம், பொறியியல் படிப்புகளைவிட கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்று, தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்றால் நீதித்துறை உள்ளிட்டபல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்பு இருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டி தேர்வுகளில் பங்கேற்று, எளிதில் வெற்றி பெற்று உயர்ந்த பதவியை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here