புதுக்கோட்டை,மே.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனலுக்கான ஆரம்ப கட்ட படப்பிடிப்பு பணிகளும் எடிட்டிங் பணிகளும்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து கல்வி தொலைக்காட்சி புதுக்கோட்டை  மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்.
கு. முனியசாமி கூறியதாவது: குழந்தைகளுக்கான பயனுள்ள நிகழ்ச்சிகளை அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.அதையும் பாடத்திட்டத்தோடு இணைந்த நிகழ்ச்சிகளாக அமைக்க வேண்டும் என முடிவெடித்துள்ளார்கள்.அதே போல்   1 முதல் பிளஸ் டூ வரை உள்ள கடினமான கணக்கு,செய்து காட்டக் கூடிய அறிவியல் சோதனைகள் பாடவேளையோடு இணைத்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.அதற்கான தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியானது வாரத்திற்கு 35 பாடவேளைகள் இருக்கும் படி நிகழ்ச்சிகள் இருக்கும்.இது போக சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் பாடம் சார்ந்த சந்தேகங்களுக்கு கல்வி தொலைக்காட்சிக்கான ஒதுக்கப்படும் தொலைபேசி எண்ணில் நிகழ்ச்சியில் பங்கு பெறும் கல்வியாளர்களிடம் எஸ்.எம்.எஸ் மூலம் கேள்வி கேட்டு அனுப்பினால் அவர்கள் அதற்கு தகுந்த பதில் விளக்கம் கொடுப்பார்கள்.கல்வி தொலைக்காட்சி சேனலில் 80 சதவீதம் கல்விக்கும் மீதமுள்ள  20 சதவீதம் தனித்திறன்களை வளர்க்க உதவும் நிகழ்ச்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வசதியானவர்களின்  குழந்தைகள் தான்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற முடியும் என்ற நிலை மாறி அனைத்து திறமையுள்ள மாணவர்களும் பங்குபெறலாம் என்ற நிலை இதன் மூலம் உருவாகும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இதற்காக தமிழகத்தில் உள்ள தன்னார்வமிக்க ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சிறப்பு நிகழ்ச்சிகளாக  ஈசி இங்கிலீஷ்,ஜாலி இங்கிலீஷ் 30 நாட்களில் எல்.கே.ஷி குழந்தை கூட 3000 ஆங்கில வார்த்தைகளை தானாக வாசிக்க செய்யும் வகையிலான நிகழ்ச்சியும்,அர்த்தமற்ற சினிமா பாடல்களை தவிர்க்கும் நோக்கில் திருக்குறளில் உள்ள 1330 பாடல்களை பள்ளி ஆண்டுவிழாக்களுக்கு பயன்படும் வகையில் தரமான இசையில்  133 பாடல்களாக  உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது..இன்றைய குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் அதிகம் அக்கறை செலுத்துபவர்கள் பெற்றோர்களா? ஆசிரியர்களா? என்ற தலைப்பில் நிகழ்சியும் இதைப்போல 32 மாவட்டங்களிலும் 32 தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தவும் இந்நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பெற்றோர்கள்,சிறப்பு கல்வியாளர்களை  வைத்து எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.ஒண்ணாப்பு டீச்சர் என்ற தலைப்பில் குழந்தைகளுக்காகவே தன்னை அர்ப்பணிக்கும் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த ஆளுமைகளுடன் நேர்காணல் நிகழ்ச்சி எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.அதே போல் பேசப் பேச தமிழ் அழகு என்ற தலைப்பில் 32 மாவட்ட மாணவர்கள் பங்கேற்கும் முழுக்க முழுக்க தமிழ் பேச்சு வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியும் ,கீரீடம் தலைப்பில்  பாடும் வானம்பாடிகளுக்கான குரல்தேடல் நிகழ்ச்சியும் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.தற்பொழுது கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரலில் உள்ள 17 நிகழ்ச்சி தலைப்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 8 நிகழ்ச்சி தலைப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டது..அதன் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  இரா.வனஜா வழிகாட்டுதலின்வபடி நலமே வளம்,குருவே துணை,சுட்டிகெட்டி,மணியோசை  ஆகிய தலைப்பின் கீழ்   படப்பிடிப்பு நடத்தி தற்பொழுது எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன..இதற்காக ஒவ்வொரு மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்களும் விடுமுறை காலத்திலும் கூட விடுப்பு எடுக்காமல் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.சென்னை படப்பதிவு மையத்தில் ஆசிரியர்கள் பங்கு கொண்டு பணிபுரிந்து வருகிறார்கள். கல்வித் தொலைக் காட்சி சேனலுக்கு என நியமிக்கப்பட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் அறிவாற்றலுடனும் ,கற்பனைத் திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர்.ஒரு சில ஆசிரியர்கள் ஏற்கனவே பணியில் சேர்வதற்கு முன்பு  ஊடகத் துறையில் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்களாகவும் உள்ளார்கள்.மேலும் கல்வி தொலைக்காட்சி ஊடக ஒருங்கிணைப்பாளர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது..இனியும் பயிற்சி வழங்கப்படும்.இதற்கு காரணம் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோளின் படி பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ்,மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் இராமேஸ்வரமுருகன் , இணை இயக்குநர்( பணியாளர் தொகுதி)  நாகராஜ முருகன்   மற்றும் கல்வித் துறையில் உள்ள இணை இயக்குநர்கள் ஆகியோர் எடுத்து வரும் துரித நடவடிக்கைகளே ஆகும்.  மேலும் கல்வித் தொலைக்காட்சி சேனலை மலேசியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் பார்வையிட்டு மிகப்பெரிய ஒருவிஷயத்தை கல்வி அமைச்சர்,கல்வித்துறை  அதிகாரிகள் செய்துள்ளனர் என மனம் திறந்து பாராட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர். மீண்டும், மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்த்து பயன்பெற முடியும். எனவே பல்வேறு அசத்தல் நிகழ்வுகளுடன் ஒளிபரப்பாகவுள்ள கல்வி தொலைக்காட்சி சேனலை காண மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.மேலும் இந்த தொலைக்காட்சி சேனல் 1 முதல் பிளஸ்  டூ  வரை உள்ள அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள தகவலை வழங்கும் என்பதில் ஐயமில்லை.இத்திட்டம் குறித்து கல்வியாளர்கள் கூறும் பொழுது   இந்திய அளவில் கல்வித் துறையின் முன்னோடி திட்டம் இது தான் என்கின்றனர்..