நீட் தேர்வு காரணமாக பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒட்டுமொத்த மாணவர்களும் படும்பாட்டை ஓர் ஆசிரியப் பார்வை மூலம் விளக்க விழைகிறேன்.  முன்பெல்லாம் நீ என்ன ஆகப்போகிறாய் என ஒரு சிறு குழந்தையிடம் கேட்டால், நான் டாக்டர் ஆகப்போகிறேன் என்ஜினீயர் ஆகப்போகிறேன் என்று விளையாட்டாகக் கூறும். ஆனால், இன்று நம் மாணவர்கள் கட்டாய நீட் தேர்வைக் கண்டதும்  அச்ச உணர்வுடன் பின்வாங்கி நாம் அதற்குத் தகுதி உடை யவர்கள் கிடையாது என்ற ஒருவிதத் தாழ்வுமனப்பான்மைக்கு உந்தித் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
நன்கு படிக்கும் சில மாணவர்கள்கூட நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள். ஏதோ ஓர் ஆர்வத்திலோ, கட்டாயத்திலோ விண்ணப்பித்தவர்கள்கூட தேர்வு எழுதாமல்  வேறு ஏதேனும் படிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன் என இலக்கில்லாமல் கூறுகிறார்கள். மருத்துவப் படிப்பு எட்டாக்கனி போல் தென்படுவது அபாயகரமானது. எதை  எதிர்பார்த்து நீட் விதைக்கப்பட்டதோ, அது துளிர்விட ஆரம்பிக்கிறது.
தனியார் பள்ளியில் நன்கொடை, அதிகக் கல்விக் கட்டணம் , தனி வகுப்புகளுக்கு (டியூஷன்) பணம் செலுத்தி  உறங்க, உண்ண, நேரமில்லாமல் படித்து தேர்வெழுதி இறுதியாக பொதுத் தேர்வைச் சந்தித்து அதிக மதிப்பெண் பெற்றாலும் போதாது; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான்  மருத்துவம் என்றதும், தேர்வெழுதிய களைப்பு தீர்வதற்குள் தனியார் நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து அதிகக் கட்டணம் செலுத்தி விதவிதமாய் (ஓஎம்ஆர், ஆன்லைன்)  தேர்வுகளை எதிர்கொண்டு இறுதியாய் மன உளைச்சலை ஏற்படுத்தும் பல்வேறு புறப் பரிசோதனைகளுக்குப் பின் கெடுபிடிகளோடு கூடிய அசல் நீட் தேர்வை எழுதுகின்றனர்.
இதைவிடக் கொடுமை, பிற மாநிலங்களில் சிறந்த கோச்சிங் என்று சில  பெற்றோர் கூறுவதைக் கேட்டு, பேருந்திலும், ரயிலிலும், காரிலும் தமது பிள்ளைகளை அழைத்துச் சென்று ஒரு பெரும் தொகையை  பயிற்சிக் கட்டணமாகச் செலுத்தி வகுப்பில் பெற்றோர் சேர்க்கும் கதை ஒருபுறம். அதிலும் முதலில் பதிவு செய்த  மாணவர்களுக்கு நேரடி வகுப்பும், பிறகு பதிவு  செய்த மாணவர்களுக்கு வேறு அறைகளில் அதே வகுப்பின் பிம்பத்தை திரையில் தெரியவைத்து பயிற்சி வகுப்பும் நடைபெறுகிறது. பல இடங்களில் பயிற்சி பெற்றவர்கள் நீட் தேர்வு எழுதும்போது சிபிஎஸ்இ-இல் படித்தவர்கள் எளிதாகத் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.
ஓர் ஆண்டு படிப்பைத் தள்ளிப்போட்டு பயிற்சி பெற்ற நம்முடைய சில மாணவர்கள் போராடி இடத்தைப் பெற்று விடுகிறார்கள். புதிதாகப் பயிற்சி பெற்றவர்கள், போதிய மதிப்பெண் எடுக்க முடியாமல் ஓர் ஆண்டு படிப்பை ஒதுக்கிவைத்து மீண்டும் நீட் கோச்சிங் சேர்ந்து அடுத்த ஆண்டுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் நுழைகிறார்கள். இனிவரும் காலங்களில் நம் தமிழக மருத்துவ மாணவர்கள் தங்களது கல்வி வரலாற்றில் ஓர் ஆண்டை இழப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
தற்போதைய நீட் தேர்வு நடைமுறையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வாகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறினாலும், அவர்களில் பாதி சதவீதம் பேர் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர்கள் என்பதுதான் உண்மை. அவர்கள் தமிழ் மொழி அறிந்திருப்பதில்லை. கிராமப்புறங்களில் பணிபுரியும்போது  தொடர்பு மொழிப் பிரச்னை காரணமாக நோய் தீர்க்கப்படுவதில் சிக்கல் உருவாகும். நம் பகுதி மாணவர்கள் மருத்துவராகி பணி புரியும்போது சாமானிய மக்கள் தங்கள் உடல்நலப் பிரச்னையைத் தெளிவாக உணர்த்தி மருத்துவம் பெற முடியும்.
ஒவ்வொரு தமிழறியா தமிழ்நாட்டு மருத்துவரும், வட நாட்டு மருத்துவரும் மொழிபெயர்ப்பாளர் வைத்துக்கொண்டா மருத்துவம் பார்க்க முடியும்? தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நமது மாநில மாணவர்கள் மருத்துவம் பயில்வதே நம் மக்களின் நோய் தீர்க்கும் அஸ்திவாரம் ஆகும். உயர் கல்விக்கு வேண்டுமானால் நீட் தேர்வைவைத்துக் கொள்ளட்டும்.
தற்போது வெளியான தேர்வு முடிவுகள் (மாயத்தோற்றம்) கண்டு அனைவரும் மகிழ்கின்றனர். இதன் விளைவினை கல்வி முக்கோணத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் மட்டுமே அறிவர். மிக அதிக தேர்ச்சி விகிதம். தேர்ச்சி பெறுவதற்குரிய மதிப்பெண்ணை மட்டுமே எடுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களால் எந்த உயர் கல்விக்கும் சேர முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ முறையில்கூட பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வாக இல்லாதபோது நம் மாணவர்கள் மட்டும் இப்படி ஒரு புதிய தேர்வு முறையில் சிக்கிக் கொண்டனர். பழைய பாடத் திட்டம் பழைய மதிப்பீடு, பழைய பாடத்  திட்டம் புதிய மதிப்பீடு, புதிய பாடத்திட்டம் புதிய மதிப்பீடு என விதவிதமாய் மாணவர்கள் தேர்வெழுதி சோதனை எலிகளாய் மாற்றப்பட்டுள்ளனர்.  மாணவர்களின் கற்றல் திறனுக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனுக்கும் பெரிய சவாலாய் தற்போதைய கல்வி முறை மாறிவிட்டது.
ஒருசில மாணவர்கள் கேட்கும் மருத்துவம் படிக்க விரும்பாத எங்களைப் போன்ற மாணவர்களுக்கு ஏன் இந்தக் கடினமான புதிய பாடத் திட்டம், எங்களுக்கு என குறைவான பாடத் திட்டம் தரக் கூடாதா என்பன போன்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. ஆசிரியர்களைவிட உளவியல் அறிந்தவர்கள் யாரும் இருக்கமுடியாது. நம் மாணவர்கள் தீர்க்கமாய் முடிவெடுக்க வேண்டிய பருவத்தில் திக்குத் தெரியாமல் அலையும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, ஆட்சியாளர்களே, அந்தந்த மாநில மக்கள்ஆரோக்கியமாய் இருந்தால்தான் வலிமையான இந்தியா உருவாகும். ஒரு நாட்டின் தலைவிதி, அதன் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள். அங்கு இருப்பவர்கள் ஆசிரியர்களும் மாணவர்களும்தான். மாணவர்கள் இவ்வாறு சிக்கித் தவிக்கும்போது ஆசிரியர் சமுதாயம் வேதனைப்படுவதோடு குரல் கொடுக்கவும் வேண்டியிருக்கிறது. மாணவர்களை அச்சப்படுத்தி அவர்களைக் கல்வி அகதிகள்ஆக்கிவிடாதபடி, நமது கல்வி முறை இருப்பதே நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக  அமையும். மாணவர் நலனே நாட்டின் நலன்.
Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here