கட்டண விபரங்களை அரசு வெளியிடாததால், தனியார் பள்ளிகளில், வசூல் அதிகரித்துள்ளது. எனவே, கட்டண பட்டியலை, பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், இலவசமாக, கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது.

அரசு உதவி பள்ளிகளில், சிறிய அளவில் வளாக பராமரிப்பு கட்டணங்கள் பெறப்படுகின்றன. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், கல்வி கட்டணம் உட்பட அனைத்து வகை கட்டணங்களும், பெற்றோரிடம் வசூலிக்கப்படுகின்றன.இவற்றில் பல பள்ளிகள், மாணவர்களிடம் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றன.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், பெற்றோரிடம் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது

:சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், கல்வி கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கல்வி கட்டண கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டி சார்பில், ஒவ்வொரு பள்ளிக்கும், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது

.பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வி தகுதி போன்றவற்றின் அடிப்படையில், கல்வி கட்டணத்தை, கட்டண கமிட்டி நிர்ணயிக்கும். தற்போது, புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

 பள்ளிகளில் கல்வி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.ஆனால், அரசு கமிட்டி நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு என்ற விபரத்தை, பள்ளி கல்வித்துறை வெளியிடவில்லை.

இந்த பட்டியலை வெளியிட்டால், பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்குவதை தடுக்க முடியும். அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, பெற்றோர் கூறியுள்ளனர்