இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க, வியாழக்கிழமை (மே 2) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு www.tneaonline.in  அல்லது www.tndte.gov.in  ஆகிய இணையதளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே, விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரம் நடத்துகிறது. 
இதுவரை இந்தக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தப் பொறுப்பு 2019-20ஆம் கல்வியாண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத அல்லது வசதி இல்லாத மாணவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வு உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். அவ்வாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும். இதுதொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள 044  22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
தயார் நிலையில் இணையதளம்: பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான வலைதளம் www.tneaonline.in  இன்னும் தயாராக இல்லை என செய்தி வெளியாகியுள்ளது. இது தவறான செய்தி.  வலைதளம் நல்ல முறையில் இயங்கி வருகிறது. 
எனவே, மாணவர்கள் விண்ணப்பத்தை மே 2-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.