எமிஸ்(கல்வி தகவல் மேலாண்மை முறைமை) இணைய தளத்தில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்களின் விவரங்கள் 100சதவீதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்:தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.






                       புதுக்கோட்டை,மே,28,   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசும்போது கூறியதாவது: இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு,ஒன்பதாம்  வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது தமிழ் வாசிக்கசெய்து ஐந்தாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு கற்பித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படவேண்டும். இந்த ஆண்டு  மாணவர்களை பயன்படுத்தாமல்  விழிப்புணர்வு பிரச்சாரம்,துண்டு பிரசுரங்கள்   மூலமான விளம்பரம் ஆகியவற்றை பயன்படுத்தி அதிக மாணவர்கள் சேர்க்கையினை மேற்கொள்ளவேண்டும்.   அரசுப்பொதுத்தேர்வில் 80சதவீத தேர்ச்சிக்கு குறைவாக மாணவர்களை தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களின் பெயர்பட்டியலை வழங்கவேண்டும்.  நீட் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.மாணவர்களுக்கு மன நல ஆலோசகராக ஒவ்வொரு பள்ளியிலும்  ஒரு சிறந்த ஆசிரியரை நியமனம் செய்யவேண்டும். மன்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும். எமிஸ்(கல்வி தகவல் மேலாண்மை முறைமை) இணைய தளத்தில் பள்ளிகளின் ஆசிரியர்கள்,மாணவர்களின் விபரங்கள் ஆகியவற்றை 100சதவீதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்த மாதம் 8,9ஆகிய தேதிகளில் நடைபெறுவதால் மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அதற்குண்டான முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக செய்திருக்கவேண்டும்.பள்ளித்திறந்த நாளன்றே அரசிடம் இருந்து வரப்பெற்ற விலையில்லா நலத்திட்டங்கள் உரிய முறையில் மாணவர்களுக்கு சென்றடையவேண்டும்.ஆங்கில வழிக்கல்விக்கு குறைந்த பட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதிசெய்யவேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சியினை பார்ப்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.வருகிற ஜூன் 3-ந்தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும்,அலுவலகப்பணியாளர்களும் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்வதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்யவேண்டும்.ஜூன் 3-ந்தேதி பள்ளி திறந்து சிறப்பாக கற்றல்,கற்பித்தல் நிகழ்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 அதனைத்தொடர்ந்து வருகிற 31-ந்தேதியுடன்  பணி ஓய்வு பெறும் அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு,அரசு உதவிப்பெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிபழகளில் பணிபுரிந்து வருகிற 31-ந்தேதியுடன் பணி ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இந்த கூட்டத்தில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் கே.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here