தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 'எமிஸ்' (கல்வி தகவல் மேலாண்மை) மூலம் ஆன்லைனில் மாற்றுச்சான்று (டிசி) வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏப்.,19 பிளஸ் 2, ஏப்.,29ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல் மாணவரின் புகைப் படத்துடன் கூடிய மாற்றுச்சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.முதலில் மே 3 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் பின் மே 6 முதல் எனவும் தேதி மாற்றம் செய்யப்பட்டது. 

மாநிலம் முழுவதும் பணிகள் முழுமையாக முடியாததால் ஆன்லைன் பதிவிறக்கம் சாத்தியமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லுாரிகளில் சேர மாற்றுச்சான்றிதழ் கிடைக்காமல் தவிப்பதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில தலைவர் பீட்டர் ராஜா கூறியதாவது: 
கையால் எழுதப்பட்ட 'டிசி'க்களை வழங்க தலைமை ஆசிரியர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால்'எமிஸ்'வழியாக ஆன்லைன் மூலம் தான் 'டிசி' வழங்க வேண்டும் என மே 2 ல் கல்வித் துறை உத்தரவிட்டது. இதனால் எழுதி வைக்கப்பட்ட லட்சக்கணக்கான டிசிக்கள் வீணாகி விட்டன.

அதே நேரத்தில் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்த நாள், பள்ளிக்கு கடைசியாக வருகை தந்த நாள், மருத்துவ ஆய்வு நடந்த நாள், மச்ச அடையாளங்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் போது தேதிகளில் குழப்பம் ஏற்படுகிறது.தொழில்நுட்ப ரீதியாகவும் சில பிரச்னைகள் இருப்பதால் மே 6ல் ஆன்லைன் டிசி கிடைக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது. உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், என்றார்.