பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மற்ற பாடங்களைவிட தமிழில் தேர்ச்சி விகிதம் சரிந்ததால் இருதாள் முறையை நீக்க வேண்டுமென தமிழாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தை 9 லட்சத்து 37 ஆயிரத்து 859 மாணவர்கள் எழுதினர். இதில் 9 லட்சத்து ஓராயிரத்து 432 பேர் தேர்ச்சி அடைந்தனர். அதன் தேர்ச்சி விகிதம் 96.12. (பாடவாரியாக தேர்ச்சி விகிதம் சதவீதத்தில்) ஆங்கிலம் 97.35, கணிதம் 96.46, அறிவியல் 98.56, சமூக அறிவியல் 97.07. மற்ற பாடங்களைவிட, தாய்மொழியான தமிழ் பாட தேர்ச்சி விகிதம் மட்டுமே சரிந்துள்ளது. அந்தப் பாடத்தில் மட்டும் 36 ஆயிரத்து 427 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்தச் சரிவுக்கு இரு தாள் முறையே காரணம் என தமிழாசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 1, பிளஸ் 2-வில் மற்ற பாடங்களைப்போல் தமிழிலும் ஒரு தாள் முறையே உள்ளது. மேலும் அகமதிப்பீடு மூலம் 10 மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது. இதனால் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் மற்ற பாடங்களைவிட, தமிழ் பாடத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பில் இரு தாள் முறை இருப்பதோடு, அகமதிப்பீடும் கிடையாது. இதனால் தேர்ச்சி விகிதம் சரிகிறது. இதைத்தடுக்க பத்தாம் வகுப்பிலும் ஒருதாள் முறையைக் கொண்டுவர வேண்டும் என தமிழாசிரியர்கள் பரவலாக வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை தமிழாசிரியர் இளங்கோ கூறியதாவது:பத்தாம் வகுப்பில் இரு தாள் முறையால் மாணவர்களுக்கு மொழிப்பாடம் மீது சலிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் மொழிப்பாடத்தில் தோல்வி அடைகின்றனர்.

பிளஸ் 1, பிளஸ் 2-வில் ஒரு தாள் முறை இருக்கும்போது பத்தாம் வகுப்பில் 2 தாள் முறை இருப்பது தேவையில்லாதது. இதனால் மொழிப் பாடத்தை ஒரு தாள் முறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதோடு, மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். மொழிப்பாட ஆசிரியர்களின் பணிச் சுமையும் குறையும். இந்தக் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தும் நிலையில், மதிப்பீட்டு முறையில் மொழிப்பாடத்துக்கு ஒரு தாள் முறையைக் கொண்டுவர வேண் டும் என்றார்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here