தமிழகத்தில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளன.
 தமிழகத்தில் தனியார் பள்ளி மழலையர் வகுப்புகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், வாகன வசதி, சீருடை உள்ளிட்டவற்றால் ஈர்க்கப்படும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை அவற்றில் சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகள் சேருவது குறைந்து வருகிறது.
 இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு முடிவெடுத்தது.
 அதன்படி, முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 52 ஆயிரத்து 933 மாணவர்களுக்கு மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சோதனை அடிப்படையில் தொடங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
 இந்த கல்வியாண்டு முதல் வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டு, அதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பள்ளிகள் திறக்கும் நாளான திங்கள்கிழமை (ஜூன் 3), மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குகின்றன.
 மழலையர் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கற்றல் திறன், பேசுதல் மற்றும் எழுத்துப் பயிற்சி, ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட தரமான ஆரம்பக் கல்வி செலவில்லாமல் அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
 குழந்தைகளை சேர்க்கலாம்: கடந்த சில மாதங்களாக அனைத்து மாவட்டங்களிலும் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. எனினும் மக்களவைத் தேர்தல் காரணமாக சேர்க்கையில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதனால் திங்கள்கிழமை மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்ட பின்னரும் பெற்றோர் தங்களது குழந்தைகளைச் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
 எல்.கே.ஜி. வகுப்பில் மூன்று வயது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளையும், யு.கே.ஜி. வகுப்பில் நான்கு முதல் 5 வயது வரையிலான குழந்தைகளையும் சேர்க்கலாம்.
 சீருடைகள்- காலணிகள்: அங்கன்வாடி மையங்களில் சேரும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, அவர்கள் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ஆகியவை பள்ளிக்கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட உள்ளன. சமூக நலத்துறை மூலம் 2,381 அங்கன்வாடி மையங்களுக்கும் கல்வி கற்பதற்கான பொருள்கள், ஆசிரியர்களுக்கான கற்பிக்கும் உபகரணங்கள், கலர் பென்சில், கிரயான்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
 ரூ.7.73 கோடி ஒதுக்கீடு: இந்தத் திட்டத்துக்காக, 2019-20-ஆம் கல்வியாண்டுக்கு ரூ.7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரமும், சமூக நலத் துறை சார்பில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 ஆசிரியர்கள் நியமனம்: இதற்கிடையே, தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் அந்தந்த ஒன்றியங்களில் கூடுதலாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு மழலையர் கல்வி பயிற்சி தமிழக அரசின் சார்பில் வழங்கப்படவுள்ளதுJoin Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here