தமிழக பள்ளிகளில் 3, 4, 5, 8 அகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு 2, 7, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு அச்சுப் பணிகள் நிறைவடைந்தன.
இதற்கிடையே 3, 4, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இந்த பாடப் புத்தகங்கள் தயாரிப்புப் பணிகள் விரைவாக நடைபெற்றன. இருப்பினும் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஏனெனில், 3, 4, 5, 8-ஆம் வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இறுதி நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்டதால், புதிய பாடத்திட்ட தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவமானது மே மாதத்தில்தான் தமிழக பாடநூல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
எனவே, புதிய பாடத்திட்டத்தை அச்சிடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 3-ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த நான்கு வகுப்புகளுக்கான புத்தகங்கள் முற்றிலுமாக கிடைக்கவில்லை என பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, 3-ஆம் வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் 45 சதவீதம் மற்றும் 5-ஆம் வகுப்புக்கான புத்தகங்கள் 75 சதவீதம் தயாராகிவிட்டதாகவும், அவற்றை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர் .
மேலும் 4 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முழுமையாக தயாராகிவிட்டதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வரை ஆசிரியர்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here