தகுதியான உடற்பயிற்சி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை தாம்பரத்தில் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல் நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட அடல் ஆக்கத்திறன் ஆய்வகத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை திறந்து வைத்து பேசியது: 
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளும் விரைவில் கணினிமயமாக்கப்படும். தமிழகமெங்கும் முதல்கட்டமாக 7 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளில் 6, 7 8 ஆகிய வகுப்புகளில் ஸ்மார்ட் வகுப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். வகுப்பறைகளில் உள்ள கரும்பலகைகள் அகற்றப்பட்டு நவீன தொடுதிரை சாதனம் பொருத்தப்பட உள்ளது.

வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் வீட்டில் யூ டியூப் மூலம் மீண்டும் தெரிந்து கொள்ளும் வசதிகள் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது. 
அடுத்த 3 மாதங்களில் 6 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். ஆசிரியர் தகுதி வாரியத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் இணையதளச் சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு விரைவில் மறுதேர்வு நடத்தப்படும். மத்திய அரசின் நிதிகளை பெற்று தமிழகத்தில் கல்வி துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாதம் ரூ.10, 000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி ஆசிரியர்களும் அதே அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தகுதியான 
உடற்பயிற்சி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
இந்நிகழ்ச்சியில் விசுவ ஹிந்து வித்யா கேந்திரா தலைவர் எஸ்.வேதாந்தம், தென் சென்னை முன்னாள் மக்களவை உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன், பள்ளிச் செயலர் கிரிஜா சேஷாத்திரி, கல்வி ஆலோசகர் விஸ்வநாதன், பள்ளி தலைமை ஆசிரியை எம்.கெளரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here