ஆசிரியர்கள் தேர்வுநிலை, சிறப்புநிலை பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெற தேவையில்லை என தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறவில்லை என்பதால் தேர்வுநிலை, சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை பெறவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அதிகாரிகளிடமிருந்து தேர்வுநிலை, சிறப்புநிலை கருத்துருக்களை பெற்று முகாம் நடத்தி முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம் நடைபெறும் நாளிலேயே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆணை வழங்க வேண்டும். இதுதவிர முகாம்கள் மூலம் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் இதுவரை சிறப்புநிலை பெறாமல் இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக வரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி இனி தேர்வுநிலை, சிறப்பு நிலை அடைய 10, 12-ஆம் வகுப்புகளுக்கான கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here