6-ஆம் வகுப்பு முதல் 3-ஆவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக கற்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டது. இதுதொடர்பான முந்தைய வரைவு அறிக்கையில், சில திருத்தங்களைச் செய்து புதிய வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் புதிய கல்வி கொள்கையை வகுப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. அப்போது அக்குழுவிடம், புதிய கல்விக் கொள்கை வகுப்பது தொடர்பாக முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் இருக்கும் அம்சங்களையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு கல்வி தொடர்பான பல்வேறு அம்சங்களையும் ஆராய்ந்து வரைவு அறிக்கையை உருவாக்கியது.
அந்த வரைவு அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக அண்மையில் பதவியேற்ற ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன்மீது கருத்து தெரிவிக்கும்படி நாட்டு மக்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.
484  பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், இந்தியாவில் 3  மொழி கொள்கை நீடிக்க வேண்டும், அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஹிந்தி, ஆங்கிலத்துடன் நாட்டின் பிற பகுதிகளில் பேசப்படும் தற்கால இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கட்டாயம் கற்க வேண்டும்.
ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் சேர்த்து ஹிந்தியை கட்டாயம் கற்க வேண்டும். இந்த நடைமுறை 6ஆவது வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
ஹிந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, ஹிந்தி மொழி கட்டாயமாகத் திணிக்கப்படாது என்று அப்போது அறிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில், 6ஆவது வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக கற்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் உள்ள திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. கர்நாடக முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி, மும்மொழித் திட்டம் என்ற பெயரில், ஹிந்தியை திணிக்கக் கூடாது என்றார்.
இதைத் தொடர்ந்து, அது வெறும் வரைவு அறிக்கைதான், இறுதி முடிவு அல்ல என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 3-ஆவது மொழியாக ஹிந்தி மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய ஷரத்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை மாணவர்களே தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
3 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியையோ அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளையோ மாற்றிக் கற்க விரும்பும் மாணவர்கள், அதை 6-ஆவது வகுப்பு அல்லது 7-ஆவது வகுப்பில் செய்யலாம். அப்படி செய்வதாலேயே, உயர்நிலை பள்ளிப்படிப்பின்போது நடத்தப்படும் மொழித் திறன் தொடர்பான தேர்வில் 3 மொழிகளிலும் தங்களுக்கு இருக்கும் திறமையை நிரூபிக்க இயலும். 
6-ஆவது வகுப்பில் 3-ஆவது மொழியை தேர்வு செய்வது என்பது சம்பந்தப்பட்ட மாணவர்களின் விருப்பம்,  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்வி முறை ஆகியவற்றின் ஆதரவு ஆகியவை இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் அடிப்படை திறனை பரிசோதிக்கும் வகையிலேயே, மொழித் திறன் தொடர்பான தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர்,அது வரைவு அறிக்கைதான். கொள்கை இல்லை. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வரைவு அறிக்கை குறித்து கருத்துகள் கேட்டுள்ளோம். முந்தைய வரைவு அறிக்கையை குழு திருத்தியுள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார். 
இதை தமிழகத்தை சேர்ந்த திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here