வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் செலுத்தும் வாடகை தொகைக்கு வரிச்சலுகை பெற முடியும். வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ)யின் கீழ், வருமான வரி சட்டம் பிரிவு 10 (13ஏ) ன்படி இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால், வாடகை செலுத்துபவர்கள் அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைதாரர்கள் தங்கள் வீட்டு உரிமையாளர்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த நகலை சமர்ப்பிக்கலாம். இதில், வாடகை தொகை, வாடகை செலுத்த வேண்டிய நாள் அல்லது தேதி, பராமரிப்பு கட்டணம், இதர கட்டணங்கள் விவரம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, மின் கட்டணம் போன்ற சில பில் தொகைகள், சொத்து வரி போன்றவற்றை குடியிருப்போர் செலுத்துவதாக இருந்தால் இதுபற்றியும் ஒப்பந்தத்தில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தில் வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் உங்களது பெற்றோராக இருந்தாலும் இந்த ஒப்பந்தம் முக்கியம்.

ஒரு வேளை, ஒரே வீட்டில் இரண்டு வாடகைதாரர்கள் பகிர்ந்து கொண்டு வசித்தால், இருவருக்கும் ஒதுக்கப்பட்ட பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியும் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும். இதன்படி, வாடகை, பில் தொகை இருவருக்கும் பிரித்து கணக்கிடப்படும். செலுத்தப்படும் வாடகைக்கு கண்டிப்பாக ரசீது வாங்க வேண்டும். அதிலும் 3,000 க்கு மேல் வாடகை இருந்தால் ரசீது முக்கியம். செலுத்தப்படும் வாடகை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் (மாதம் 8,333க்கு மேல்) இருந்தால் வீட்டு உரிமையாளரின் பான் எண் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். வீட்டு உரிமையாளரின் பான் எண் இல்லாவிட்டால் படிவம் 60 சமர்ப்பிக்க வேண்டும். இவை இல்லாமல் சமர்ப்பித்தால் வருமான வரி நோட்டீஸ் வரும.

வீட்டு உரிமையாளர் பான் எண் வழங்க மறுத்தால், அவருடன் ஒப்பந்தம் செய்த வாடகை ஒப்பந்த பத்திரத்தை தாக்கல் செய்யலாம். அதில், நீங்கள் கொடுக்கும் வாடகை தொகை சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதோடு, ரசீதும் சமர்ப்பிக்கலாம். வாடகை தொகையை ரொக்கமாக கொடுக்காதீர்கள். ஒப்பந்தத்தில் இடம்பெற்ற அல்லது ரசீதில் இடம்பெற்ற தொகைக்கு மேல் ரொக்கமாக கொடுத்திருந்தால் வரிச்சலுகை பெற முடியாது. வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அல்லது காசோலை மூலம் வழங்கியிருந்தால் அதை ஆதாரமாக காட்டலாம். இவற்றை வருமான வரி அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்வார்கள்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here