மதுரை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வணிகவியல் படிப்புகள் புறக்கணிக்கப்பட்டு கணிதம் மற்றும் அறிவியல் படிப்புகள் திணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மாணவர்கள் உயர்கல்வி பெறுவது தடைபட வாய்ப்பு இருப்பதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் குறை கூறுகின்றனர்.
தமிழகத்தில் 3,100-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள், 2,200-க் கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 3,100 அரசுப் பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகள் கிராமப்புறங்களில் இயங்கி வருகின்றன.

இவை கிராமப்புற மாணவர்களுக்கு மிக முக்கிய கல்வி ஆதாரமாக உள்ளன.
அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் பிரிவாக அறிவியல் பாடப் பிரிவும், இரண்டாவது பிரிவாக கணினி அறிவியல், மூன்றாவது பிரிவாக வணிகவியல், கணக்கு பதிவியல் ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் உள்ளன. இம்மூன்று பாடப் பிரிவுகளிலும் பொதுப்பாடங்களாக தமிழ், ஆங்கிலம் ஆகியவை உள்ளன.
இவற்றில் முதல் பிரிவான அறிவியல் பகுதியில், இயற்பியல், உயிரியல், கணிதம், வேதியியல் பாடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கு அறிவியல் பாடப்பிரிவுகளில் படித்தால் மட்டுமே செல்ல முடியும், இரண்டாவது பிரிவில் கணினி அறிவியல், கணிதம் ஆகியவை இருப்பதால் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய படிப்புகளுக்கு செல்ல முடியும்.
மூன்றாவது பிரிவில் வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளாதாரம், புள்ளியியல் அல்லது வரலாறு அல்லது புவியியல் அல்லது அரசியல் அறிவியல் ஆகிய பாடங்கள் உள்ளன. மூன்றாவது பிரிவைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் கல்லூரிகளில் வணிகம் மற்றும் கலை படிப்புகளில் சேர முடியும்.
இந்நிலையில், தமிழகத்தில் கிராமப்புறங்களில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில் சிறப்புப் பயிற்சிகள், தனிப் பயிற்சிகள் போன்றவை போதிய அளவில் இல்லாததால் இந்தப் பாடங்களை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு வரை சமாளித்து படித்து விடும் மாணவர்கள், பிளஸ் 1 படிப்பில் அறிவியல் மற்றும் கணிதம் இல்லாத மூன்றாவது பிரிவான வணிகவியல் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூன்றாவது பாடப்பிரிவுகளில் எப்போதுமே மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பிரிவை புறக்கணித்து வருவதால் மாணவர்கள் பத்தாம் வகுப்போடு தங்கள் படிப்பை நிறுத்திக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியது: தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு தரம் உயர்த்தப்படும்போது அந்த பள்ளிகளுக்கு மேல்நிலை வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வணிகவியல், பொருளியல், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி வழங்கப்படும். மேலும் இந்த 9 பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனமும் நடைபெற்று வந்தது.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளில் மூன்றாவது பிரிவு என்றழைக்கப்படும் வணிகவியல் பாடப்பிரிவை தொடங்க அரசு அனுமதிக்கவில்லை. இதனால் வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளாக இருந்து மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பாடப்பிரிவுகள் முற்றிலுமாக இல்லை. அந்தப் பள்ளிகளில் முதல்பிரிவான அறிவியல், இரண்டாவது பிரிவான கணினி அறிவியல் மற்றும் கணிதம் மட்டுமே உள்ளன. மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வணிகவியல் பாடத்தை சுயநிதி பிரிவாக தொடங்கிக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம் சுயநிதிப் பள்ளிகளில் பள்ளி நிர்வாகங்களே ஆசிரியரை நியமனம் செய்து வணிகவியல் பிரிவுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்கின்றன. இதில் வணிகவியல் சுயநிதிப் பிரிவு என்பதால் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவுகள் மட்டுமே இருப்பதால் அதில் சேர்வதற்கு கிராமப்புற மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தற்போது மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம். ஆனால் கிராமப்புற மாணவர்களிடம் அதற்கான பொருளாதார வசதி வாய்ப்பு இல்லை. பொறியியல் படிப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி படித்தாலும் வேலைவாய்ப்புகள் இல்லை. ஆனால் கல்லூரிகளில் கலை படிப்புகளில் குறைவான செலவில் ஒரு இளைநிலை பட்டம் பெற்றுவிடலாம். மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வேலை பெற்றுவிடலாம் என்பதாலும் அறிவியல், கணிதப் பிரிவுகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.
பிளஸ் 1 படிப்பில் 100 மாணவர்கள் விண்ணப்பித்தால் அதில் 10-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே அறிவியல் படிப்புகளில் சேர்கின்றனர். இதர 90 மாணவர்களும் வணிகவியல் படிப்புக்கு மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பிரிவுகள் தொடங்கப்படாததால் அறிவியல், கணித பிரிவுகள் மட்டுமே சேரும் வாய்ப்பு மாணவர்களுக்கு உள்ளன. இதில் சேர விரும்பாத மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். வசதி இல்லாத மாணவர்கள் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுவது ஆகிய இரு வழிகள்தான் உண்டு.
இதில் கடந்த 2 ஆண்டுகளாக அறிவியல் படிப்பை விரும்பாத மாணவர்கள் படிப்பை நிறுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே அரசு குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் வணிகவியல் பிரிவுகளையும் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிக்கல்விக்காக அரசு செலவழித்து வரும் கோடிக்கணக்கான நிதி வீணாகிப் போய் விடும் என்றனர்.
ஆசிரியர்கள் சந்தேகம்
அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பாடப்பிரிவு புறக்கணிப்பது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறியது:
கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளுக்கு வரவேற்பு இல்லை. கலை படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் கலைக் கல்லூரிகளில் பிகாம், பிபிஏ, பிஏ பொருளாதாரம், பிஏ வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர் சேர்க்கையின்றி ஆண்டுதோறும் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன. எனவே பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதை தவிர்ப்பதற்காகவும், அக்கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதாலும் அரசுப் பள்ளிகளில் திட்டமிட்டு வணிகவியல் பாடப்பிரிவுகள் புறக்கணிப்பட்டு கணிதம், அறிவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றனர்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here