புதிய பாடத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட பாடநூல்கள் அனைத்து வகுப்புகளுக்கும் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு  17 நாள்கள் ஆகியும் 3,  4 , 5, 7 , 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்படவில்லை என தெரிகிறது. தனியார் பள்ளிகளில் இதர வகுப்பு பாட புத்தகங்கள் சரிவர கிடைக்காததால் பெற்றோர்கள் டிபிஐ வளாகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.  கடந்த ஆண்டில்,  1, 6, 9, 11 ஆகிய  வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு அச்சுப் பணிகள் நிறைவடைந்தன. இதனிடையே 3, 4, 5, 8 வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.   எனினும் 3, 4, 5, 8 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் இதுவரை முழுமையாக அச்சடிக்கவில்லை என்பது கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் தெரியவந்தது. ஏனெனில், 3, 4, 5, 8  வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இறுதி நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்டதால், புதிய பாடத்திட்ட தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டது.  இதனால், புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவமானது மே மாதத்தில் தான் தமிழக பாடநூல் கழகத்திற்கு வழங்கப்பட்டது.   புதிய பாடநூல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஜ்ஜ்ஜ்.ற்ங்ஷ்ற்க்ஷர்ர்ந்ள்ர்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பாடங்களை நடத்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் நகல் மூலம் பாடம் நடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும்,  அனைத்து மாணவர்களையும் நகலெடுக்க வற்புறுத்த முடியாது என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் புதிய பாடநூல்களை அச்சடிக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைய மேலும் ஒரு மாத காலம் ஆகலாம் என தகவல் பரவுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 
காரணம் என்ன?: இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:  மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பாடநூல்களுக்கான சி.டி.க்கள் தயாரிக்கப்பட்டு பாடநூல் கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே,  அச்சடிக்கும் பணிகள் தொடங்கும்.  இந்தநிலையில் தேர்தல் நடந்தது,  எஞ்சியுள்ள 8  வகுப்புகளுக்கும் திடீரென நிகழாண்டே புதிய பாடநூல்கள் என அறிவிக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் பல இடங்களில் பாடநூல்கள் விரைவாக அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, சில நாள்களுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல்கள் முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தனர். 



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here