மொழிப் பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டு தற்காலிகமாக மத்திய அரசின் புத்திசாலித்தனமான முடிவால் தொடக்கத்திலேயே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வரைவு அறிக்கையில் ஹிந்தி கட்டாயமில்லை என்கிற திருத்தத்தை வெளியிட்டு இப்போதைக்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 
கடந்த ஆண்டு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கனின் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்டது. அந்தக் குழு மத்திய அரசுக்கு வரைவு அறிக்கையை வழங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக இணையத்தில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பரிந்துரைகள் வெளியிடப்பட்டு, அதன் மீது கருத்துத் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். 484 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை, மாநில மொழி (தாய்மொழி), ஆங்கிலம் ஆகியவற்றுடன், ஆறாவது வகுப்பு முதல் மூன்றாவது மொழியாக ஹிந்தியையும் கட்டாயம் கற்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இப்போது கட்டாயமாக ஹிந்தி கற்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு, தங்களது மாநில மொழி அல்லாத வேறு ஏதாவது ஓர் இந்திய மொழியைக் கற்க வேண்டும் என்கிற திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 
ஹிந்தி எதிர்ப்பு என்கிற பார்வையில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கையை அவதானிக்க முற்படுவது புத்திசாலித்தனமானது அல்ல. இந்தப் பிரச்னையின் அடிப்படையில் போராட்டத்தைத் தூண்டிவிட்டு  அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முற்படுவது பொறுப்பின்மை. அதேபோல, மாநில மக்களின் உணர்வுகளையும், வருங்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படாமல் ஹிந்தியை வலுக்கட்டாயமாகத் திணித்து தேசிய மொழியாக அதற்கு அங்கீகாரம் பெற்றுத்தர வேண்டும் என்கிற தேசியக் கட்சிகளின் முனைப்பையும் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை உள்ளடக்கியுள்ள பல முக்கியமான கொள்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அறிவுஜீவிகளின் மொழி ஆங்கிலம்  என்றும், இந்தியாவில் 15 விழுக்காட்டினர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள் என்றும், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் குறித்து விவாதிப்பதை விட்டுவிட்டு, மூன்று மொழிக் கொள்கை தேவையா, தேவையில்லையா என்று அரசியல் ரீதியாக அலச முற்படுவது புத்திசாலித்தனமாகாது.
மக்கள் மத்தியில் கல்வி கற்பது என்று சொன்னாலே ஆங்கிலம் தெரிந்திருப்பது என்கிற எண்ணம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அதன் விளைவால் ஆங்கிலக் கலப்பில்லாமல் இந்தியாவின் எந்தப் பகுதியிலும், எந்த மொழியிலும் (ஹிந்தி உள்பட) எவராலும் பேசிவிட முடியாது என்கிற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆங்கிலம் சரியாகக் கற்றுத்தரப்படவில்லை என்பதாலும், தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முடியும் என்பதாலும்தான் இந்தியா முழுவதும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல உருவாகி வருகின்றன.
இதன் விளைவாக, தாய்மொழியில் எழுத, பேசத் தெரியாத தலைமுறை உருவாகி ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால், தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தும் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாகத் தாய்மொழியில் கல்வி (மாநில மொழி) என்பதை மொழிப் பற்றாளர்களும் நடுநிலையாளர்களும் வரவேற்றாக வேண்டும். ஹிந்தித் திணிப்பில் குளிர்காய நினைக்கும் அரசியல் கட்சிகள், தமிழில் கல்வி என்பதை மறைக்க முற்படுகின்றன.
இன்றைய நிலையில் சர்வதேச மொழியாக ஆங்கிலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவிலான வர்த்தகத்துக்கும், வேலைவாய்ப்புக்கும், தொடர்புக்கும் ஆங்கிலம் கட்டாயமாகிவிட்டிருக்கும் நிலையில், அதன் முக்கியத்துவத்தை தேசப்பற்று என்ற போர்வையில் தேசிய கல்விக் கொள்கையை குறைக்க முற்படுவது வருங்கால இளைய சமுதாயத்தினருக்கு இழைக்கப்படும் அநீதி. தகவல் தொழில்நுட்பத்தில் சர்வதேச வல்லமையை இந்தியா பெற்றதற்கு ஆங்கிலம்தான் காரணம். இந்திய மொழிகளை ஆதரிப்பதற்காக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க முற்படுவது ஏற்புடையதல்ல.
1930-லிருந்து ஹிந்தி பிரச்னை வரும் போதெல்லாம் நமது தாய்மொழியாம் தமிழுக்கு ஆபத்து என்று தமிழகம் கொதித்தெழுகிறது. உலகிலேயே நம்மைப் போன்ற மொழிப்பற்றுள்ள இனம் இல்லை என்பது பெருமிதத்துக்குரியது. அதே நேரத்தில் ஹிந்தி மீதான நமது எதிர்ப்பு, திராவிட அரசியலால் பிராமணர்களின் அடையாளம் என்று கருதப்படும் சம்ஸ்கிருதத்தின் மீதான எதிர்ப்பு என்பதையும் நாம் உணர வேண்டும்.
அவருக்கு ஹிந்தி தெரியும் என்பது முதல்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுத் தருவதற்கான தகுதியாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டதையும், இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரின் வாரிசுகளும் ஹிந்தி படித்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கும்போது, ஹிந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டக்களத்தில் குதிக்கத் தயாராகும் தலைவர்களின் போலித்தனத்தைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாகத் தாய்மொழிக் கல்வி, தாய்மொழியில் மட்டுமே கல்வி. ஆறாம் வகுப்பு முதல் தாய்மொழியும், ஆங்கிலமும் கூடுதலாக. இந்திய மொழியோ, அந்நிய மொழியோ ஏதாவதொரு மொழி கற்பிக்கப்பட வேண்டும். அந்த மும்மொழிக் கொள்கைதான் வருங்கால இந்தியாவை மட்டுமல்ல, எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்துக்கும் நல்லது.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here