ஓய்வூதிய ஒப்படைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிடித்தம் செய்ய இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு குடிமைப் பொருள் கழக ஓய்வூதியச் சங்கம், மதுரை மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், ஆவின் ஊழியர்கள், ராம்கோ ஊழியர்கள், ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:
வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனம் செலுத்தும் வருங்கால வைப்பு நிதியில் 12 சதவீத பங்களிப்பு தொகையிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.265 முதல் ரூ.2,500 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோருக்கு கடந்த 2014 முதல் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமும், ஓய்வூதிய ஒப்படைப்பு நிதியும் வழங்கப்படுகிறது. ஓய்வூதிய ஒப்படைப்பு நிதி பல்வேறு தவணைகளில் பிடித்தம் செய்யப்படுகிறது. இப்பணம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு முழு ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதிய ஒப்படைப்பு நிதிக்கு முறையாக பணம் பிடித்தம் செய்யப்படுவது இல்லை. 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தில் 200 மாதங்களையும் தாண்டி பணம் பிடித்தம் செய்வது தொடர்கிறது. 
இவ்வாறு தவணை முடிந்த பிறகும் ஓய்வூதிய ஒப்படைப்பு பணம் பிடித்தம் செய்வதை நிறுத்தி, முழு ஓய்வூதியம் வழங்கக் கோரி வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிரந்தரமாக பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும், பணம் பிடிப்பதை நிறுத்த முடியாது என்றும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், ஓய்வூதியர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஓய்வூதிய ஒப்படைப்புப் பணத்தைப் பிடித்தம் செய்ய வருங்கால வைப்பு நிதி ஆணையத்துக்கு தடை விதிக்க உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
இந்த மனுக்கள், நீதிபதி ஆர். மகாதேவன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஓய்வூதிய ஒப்படைப்பு நிதிக்கு பணம் பிடித்தம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here