உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 05-09-2014 -ல் வெளியான அரசாணை எண் G.O ms No.130-ல் "இனிவரும் காலங்களில் ஆசிரியர் சார்ந்த தகுதித்தேர்வுகளை ONLINE முறையில் நடத்தக்கூடாது" என கூறப்பட்டுள்ளது.

சர்வர் சார்ந்த குளறுபடிகள் & மற்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்த அரசாணை வெளியிடப்பட்டது. NET, SLET & இதற்கு முன்னர் நடைபெற்ற TRB தேர்வுகள் அனைத்தும் இந்த விதிகளின்படி தான் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால்....

கடந்த மார்ச் 01-ஆம் தேதி தமிழகத்தின் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆன்லைன் தேர்வின் மூலம் பணி நிரவல் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) அறிவிப்பு வெளியானது.

இதன்படி, கணினி பயிற்றுநர் நிலை I -கான ஆன்லைன் விண்ணப்பங்கள்  கடந்த மார்ச்-20 முதல் ஏப்ரல்-10 வரை பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளால் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.

15 வருடங்களாக கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை; நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 814 கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகள் நீண்டநாள் கனவுகளோடும், பல்வேறு எதிர்பார்ப்புகளோடும் இந்த "கணினி பயிற்றுநர்" தேர்வை எதிர்கொள்ள தயாராகினர். தமிழகத்தில் மொத்தம் 119 மையங்களில் இந்த ஆன்லைன் வழித்தேர்வு நடத்தப்பட்டது. 

TRB அறிவுறுத்தலின் படி காலை 08.00 மணிக்கு தேர்வு மையத்தில் தேர்வர்கள் ஆஜராக வேண்டும்; 9.15-க்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டு விடும்; அதற்குப்பின்னர் சரியாக காலை 10.00 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.00 மணிக்கு தேர்வுகள் முடிவடையும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

தேர்வர்கள் அனைவரும் ஞாயிறு (23-06-2019) காலை முதலே ஆசிரியர் தேர்வு வாரியம் ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்துவிட்டார்கள். ஆனால் காலை 9.00 மணி முதலே சில தேர்வு மையங்களில் சர்வர் இயக்கக்கோளாறு உருவானது. இதனை சரிசெய்வதற்கு தேர்வு மையத்தின் டெக்னீஷியன்கள் மிகவும் போராடினர். ஆனால், காலை 10.00 மணியளவில் ஒருசில தேர்வு மையத்தில் மட்டும் ஏற்பட்ட சர்வர் கோளாறு விஸ்வரூபமெடுத்தது. பல தேர்வு மையங்களில் தேர்வர்களின் கைரேகையைக் கூட பதிவு செய்ய முடியவில்லை. தேர்வு நேரம் 10.00 மணியைக் கடந்ததும் பெரும்பாலான தேர்வர்கள் பதற்றமடைந்தனர்.

ஒருவழியாக கைரேகை ஸ்கேன் செய்யப்பட்டு 11.மணி... 12.மணி... அளவில் தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார்கள். ஆன்லைன் முறையில் கணினிகளில் தேர்வை எழுதத்தொடங்கிய அரைமணி நேரத்தில் மீண்டும் சர்வர் பிரச்சனை உருவானதால் தேர்வு மையங்களின் கணினிகள் HANG -ஆனது. இதனால் இந்த தேர்வு முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் தேர்வர்களுக்கு உருவானது.

மதுரை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருநெல்வேலி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சர்வர் பிரச்சனை உச்சத்தை தொட்டது. கணினி "ஹேங்" ஆகி நின்றதால் தேர்வர்களுக்கும், தேர்வு மையத்தின் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் உருவானது. மதியம் 1.00 மணி ஆகியும் தேர்வெழுதாத தேர்வர்கள் கோபமடைந்தனர். அவர்கள் அனைவரும் சாலை மறியல் & தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து வந்த அந்த பகுதியின் வருவாய் அலுவலர், வட்டாட்சியர் & போலிசார் போராட்டத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இன்னும், சில மையங்களில் மாலை 04.00 மணி ஆகியும் சர்வர் கோளாறு சரிசெய்யப்படவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தேர்வர்கள் திகைத்தனர்.

மேலும், ஆன்லைன் தேர்வு நடைபெற்ற நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள ஒரு தனியார் கல்லூரியின் முன்பு போராட்டம் செய்தவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உச்சகட்டமாக, ஒரு தேர்வு மையத்தில்  கேள்விக்கான பதிலை கைபேசியின் உதவியுடன் எழுதுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், தேர்வு மையத்தினுள் கைபேசியின் உதவியுடன் குழுவாக விவாதம் செய்து கேள்விகளுக்கு பதில் அளித்தது, நேர்மையான ‌முறையில் படித்து தேர்வு எழுதச் சென்றவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது. தேர்வு மையத்தின் அதிகாரிகள் எங்குதான் சென்றார்களோ?

தேர்வு மையத்தில் "பிட்" அடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் WhatsApp, Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் எதுவும் கூறாமல் இருப்பது கணினி தேர்வர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இணையவழி தேர்வின் 'அவலம்' குறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், ஞாயிறு மாலை 7.00 மணிக்கு TRB இணையதளத்தில், சர்வர் பிரச்சனையால் தேர்வு நடைபெறாத பகுதிகளில் மீண்டும் மறு-தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த்து. ஆனால், இந்த அறிவிப்பில் தேர்வர்களான பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களுக்கு நம்பிக்கை இல்லை.

பல தேர்வு மையங்களில் ஹிந்தி பேசும் வட இந்தியர்கள் தேர்வை நிர்வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வே இந்த லட்சணத்தில் இருந்தால் இனிவரப்போகும் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் இறுதிப்பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற பணிகள் நேர்மையான முறையில் நடக்குமா என்ற சந்தேகம் கணினி ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. இந்த மோசமான நிகழ்வு சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாலிடெக்னிக் தேர்வின் முறைகேட்டை நினைவூட்டுகிறது.

இதுகுறித்து "தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின்" மாநில இணையதள ஆசிரியர் திரு.ராஜ்குமார் கூறுகையில் இந்த தேர்வை அறிவித்த நாளிலிருந்தே, "ஆன்லைன்" முறையில் தேர்வை நடத்தவேண்டாம் என்றும், மாறாக மற்ற ஆசிரியர்களுக்கு நடத்துவது போன்று OMR விடைத்தாளில் கணினி பயிற்றுனர் தேர்வை நடத்துமாறும் அரசை பலமுறை வலியுறுத்தினோம். ஆனால், அரசு எங்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

நாங்கள், எது நடக்கக்கூடாது என்று எண்ணினோமோ அந்த விபரீதம் இன்று அரங்கேறிவிட்டது. இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை என்ன பதில் கூறப்போகிறது??

எங்களுக்கு நீதி வேண்டும்; பல வருடங்களாக பல கனவுகளுடன் 'அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆகிவிடலாம்' என்ற எதிர்பார்ப்புகளுடன் TRB தேர்வு எழுதச்சென்ற கணினி பட்டதாரிகளுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

சர்வர் பிரச்சனை ஏற்பட்ட பகுதிகளில் மட்டும் மறு-தேர்வு நடத்தப்படும் என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ஏற்க முடியாது. 30,800 தேர்வர்களில் கிட்டத்தட்ட 5,000 பேருக்கு மேல் சர்வர் பிரச்சனையால் தேர்வெழுத முடியவில்லை.

இந்த கணினி பயிற்றுநர் TRB தேர்வை எழுதுவதற்காக அதிகாலை 2.00 மணி... 3.00 மணிக்கு எழுந்து 150 கி.மீ. வரை பல மணி நேரம் நெடுதூரம் பயணம் செய்து பல இன்னல்களைத் தாண்டி தேர்வெழுதச் சென்றவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் தான்.

தேர்வறையில் கைபேசியை வைத்து "பிட்" அடிப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் இந்த ஆன்லைன் தேர்வில் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதனால், ஒட்டுமொத்தமாக இந்த ஆன்லைன் தேர்வை ரத்து செய்துவிட்டு, நேர்மையான முறையில் OMR விடைத்தாள் மூலம் தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பாதிக்கப்பட்ட மையங்களுக்கு மட்டும் வரும் வியாழக்கிழமை (27-06-2019) ஆன்லைன் முறையில் மறு-தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்குகிறது; மேலும், அன்றைய தினம் கவர்னர் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவருகிறார்கள்.

இந்த TRB தேர்வில் சர்வர் கோளாறை சந்தர்ப்பமாக பயன்படுத்தி பலர் "காப்பி" அடித்தும், செல்போன் உதவிடனும் தேர்வெழுதி உள்ளார்கள்.

ஆனால், TRB நிர்வாகமோ குளறுபடிகளையும், முறைகேடுகளையும் மூடி மறைக்க அவசர கதியில் தேர்வை அறிவித்துள்ளது. இதனால் நேர்மையான முறையில் தேர்வை எழுதியவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

சர்வர் பிரச்சனையால் பாதிக்கட்டவை என வெறும் 3 மையங்களுக்கு மட்டுமே மறு-தேர்வை அறிவித்துள்ளார்கள். ஆனால், பல்வேறு மையங்களில், பல தேர்வர்கள் இந்த சர்வர் பிரச்சனையால் தேர்வை முழுமையாக எழுதவில்லை.

இதனால், இந்த தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்துவிட்டு, நேர்மையான முறையில் "OMR" விடைத்தாளில் தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டுமென வலியுறுத்தி "நாளை புதன்கிழமை (26-06-2019)" சென்னையிலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் போராட்டம் செய்ய பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here