சென்னை : தமிழக பள்ளிகளில் மாணவர்கள் கையில் வண்ண கயிறு, நெற்றியில் திலகம் அணிந்து வருவதை ஜாதி அடையாளமாக சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறை, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம், சமீபத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.அதில், 'பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழக பள்ளிகளை பார்வையிட்டபோது, ஒரு சில பள்ளிகளில் விளையாட்டு அணி தேர்வு செய்யும் போதும், மதிய உணவு இடைவேளை மற்றும் வகுப்பு நேரங்களிலும், குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள், அடையாளம் கண்டு ஒன்று கூடிக்கொள்ளும் வகையில், தங்களது கையில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிற கயிறு கட்டியிருந்துள்ளனர்.மோதிரம் அணிந்தும், நெற்றியில் திலமிட்டும், தாழ்ந்த ஜாதி, உயர் ஜாதி என, தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டியுள்ளனர்.

இதனால் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது.ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தும் இதுபோன்ற வழக்கங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது; கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இச்சுற்றறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை, இணை இயக்குனர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.ஏதோ ஒரு பள்ளியில் நடந்த சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை, பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவர்கள் ஜாதிரீதியாக கயிறுகள் கட்டியிருப்பதை கண்டித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, ஒட்டுமொத்தமாக பின் விளைவுகளை ஆராயாமல், ஹிந்துக்களின் மத நம்பிக்கை, அடையாளத்தை அகற்ற, கல்வித்துறை முயற்சிப்பதாக கற்றச்சாட்டு எழுந்துள்ளது.பண்டிகை, திருவிழாவின்போது ஹிந்துக்கள் கையில் கயிறு கட்டுவது வழக்கம். ராக்கி கயிறு கட்டுவது, குல தெய்வ வழிபாட்டின் போது விரதம் இருந்து மஞ்சள் துணி, கயிறு கட்டுவது, திருப்பதி, பழநி கோவில்களுக்கு சென்று வந்தால் கறுப்பு கயிறு கட்டுவது போன்ற வழக்கங்களை கடைப்பிடிக்கின்றனர்.இவை அனைத்தும், மத நம்பிக்கையே தவிர ஜாதி தொடர்பானவை அல்ல. இதைக்கூட அறியாமல், அதிகாரிகள் தெரிவித்தனர் என பொத்தாம் பொதுவாக கூறி, ஹிந்து மத அடையாளங்களையும் மாணவர்களிடம் இருந்து விலக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை செயல்பட்டதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கருத்து கூற மறுப்பு : சுற்றறிக்கைக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு குறித்து கருத்து பெற, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவை தொடர்பு கொண்ட போது, பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். இந்து அமைப்பினரின் கருத்துக்கள் : அர்ஜூன் சம்பத் - ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் : முஸ்லிம் மாணவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தொழுகைக்காக பள்ளி நேரம் மாற்றம், வகுப்பறை நேரத்தில் விலக்கு. மாணவியர் சீருடையை தாண்டி பர்தா அணிதல் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிறிஸ்தவ மாணவர்கள் சிலுவை அணிகின்றனர்.

இந்நிலையில், தமிழர்கள் கயிறு கட்டுவதையும், நெற்றியில் திலகமிடுவதையும் ஜாதியுடன் அடையாளப்படுத்தி உள்நோக்கத்தோடு சில அதிகாரிகளும், திராவிட இயக்க சிந்தனையாளர்களும் செய்கின்றன. இது கண்டிக்கத்தக்கது. ஜாதிக்கென தனி அடையாளம் எங்கும் இல்லை; ஆன்மிக அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சியே இது. தவறான உத்தரவை, தமிழக பள்ளிகல்வித்துறை திரும்பப் பெற வேண்டும்.கிஷோர்குமார் - ஹிந்து முன்னணி மாநில செயலாளர் : பள்ளி, அனைத்து மத மாணவர்களுக்கும் பொதுவானது.

அதில் ஒரு பிரிவினரின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது கண்டிக்கத்தக்கது. பிற மத மாணவர்கள் மத அடையாளர்களுடன் வர அனுமதித்துவிட்டு, ஹிந்து மாணவர்களை மட்டும் தனிமைப்படுத்தி, அவர்களது அடையாளங்களை அழிக்க முயற்சிப்பது, பிரிவினைக்கே வழிவகுக்கும்.பொன்மணிவாசக அடிகளார் - பிள்ளையார் பீடம், கோவை : மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. மாணவர்கள் கயிறு அணிவது, திலகமிடுவது போன்றவற்றை தடுக்கக் கூடாது. பள்ளி கல்வித்துறை தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.கலைச்செல்வி-தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் : பள்ளி கல்வித்துறை தொடர்ந்து, ஹிந்து மத உணர்வாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாக, 'மாணவியர், தலையில் பூ வைக்கக் கூடாது; நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது; கைகளில் கங்கன கயிறு அணியக் கூடாது' என, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதை உடனே திரும்பப் பெற வேண்டும்.எச்.ராஜா - பா.ஜ., தேசிய செயலர் : கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது, ஹிந்து மத நம்பிக்கை தொடர்பானது. இவற்றை, பள்ளிகளில் தடை செய்வது, அப்பட்டமான, ஹிந்து விரோத செயல், மாற்று மத சின்னங்களை தடை செய்யும் தைரியம், பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா; இந்த ஆணை, உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.அருளப்பன் - முன்னாள் பொதுச் செயலர்,தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழகம் : பள்ளிகள், சமத்துவத்தை போதிக்கும் இடம் என்பதால், அங்கே ஜாதி, மத அடையாளங்கள், அறவே இருக்கக் கூடாது. இதற்கு, பள்ளிகளில், மாணவர்களை சேர்க்கும் போதே, ஜாதி மற்றும் மதம் குறித்து, எந்த தகவலையும், விண்ணப்பத்தில் கேட்க கூடாது. மத நம்பிக்கை அடிப்படையிலான பாரம்பரிய பழக்கங்களை, தடை செய்யக் கூடாது.

ஜாதி சான்றிதழையும், பள்ளிகளில் கேட்கக் கூடாது. மாணவர்கள், எந்த ஜாதி, மதமானாலும், அவர்களுக்கு அரசே உதவி செய்ய வேண்டும்.ராமரவிக்குமார், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் : பள்ளி மாணவர்கள் இடையே, ஜாதி உணர்வு மேலோங்க, கயிறு மட்டும் காரணமாக அமைவது இல்லை. பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையின் போது, ஜாதிகளை பதிய மாட்டோம்; ஜாதி சான்றிதழ் கேட்க மாட்டோம் என, அரசாணை வெளியிட வேண்டும்.ராமகோபாலன், நிறுவன அமைப்பாளர், ஹிந்து முன்னணி : கல்வித் துறையின் சுற்றறிக்கை, தீய நோக்கம் உடையது. ஹிந்து மக்கள், ஆடி மாதத்தில், காப்பு கட்டி, விரதம் இருப்பர். சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில், ரக் ஷா பந்தன் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை தடுக்கம் நோக்கத்தில், இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது