பிளஸ் 1 காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் கல்வித்துறை முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.
இதில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி பிளஸ் 1 வகுப்புக்கு கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், புள்ளியியல் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான தேர்வுகள் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்னதாக காலையிலேயே பாட வினாத்தாள்கள் கட்செவி அஞ்சல் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியானது ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியது, கடந்த சில நாள்களாக தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாவதாக தகவல்கள் வந்தன. அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 வணிகவியல் தேர்வு வினாத்தாள் காலையிலேயே சமூக வலைதளங்களில் வெளியானது. இதில் இடம்பெற்ற கேள்வித்தாளும், மதியம் தேர்வு அறையில் மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாளும் ஒரே மாதிரியாகவே இருந்தன.
இதேபோல், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்வுகளின் வினாத்தாள்களும் முன்னதாகவே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. அந்த செயலியில் கல்வி என்ற பக்கத்தில் இதேபோல் ஏராளமான வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் கல்வித்துறை முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Join Telegram Group Link -Click Here