1. கல்வியின் நோக்கம் போதியுங்கள்

என்ன படிக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் பள்ளிக்கூடம். எப்படிப் படிக்க வேண்டும் என்பதைப் போதிப்பவர் ஆசிரியர். ஆனால் ஏன் கற்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான விடையை யாரும் எழுப்புவதில்லை. நோக்கங்களை நாம் கற்றுத்தருவதில்லை. ‘ஏன் படிக்கணும்?’உங்கள் மாணவர்களிடம் கேட்டுப்பாருங்களேன். ‘நல்ல படிக்கணும்.’,படிச்சு..? ‘நல்ல வேலையில சேரணும்’,சேர்ந்து...? ,‘நல்ல சம்பாதிக்கணும்’,வீடு வாங்கணும், கார் வாங்கணும். அமெரிக்காவில் போய் வேலை பார்க்க வேண்டும். இங்கு கல்வி என்பது சம்பாத்தியத்திற்கான வழி.

கல்வி என்பது புகழுக்கான குறியீடு. பெயருக்குப் பின்னால் அடுக்கிக் கொள்ள சில ஆங்கில எழுத்துகள். பட்டம் என்பது பெருமையின் அடையாளம். படிச்ச மாப்பிள்ளைக்கு பெண் என்பது முன்னேறி ‘பொண்ணு என்ன படிச்சிருக்கா?’ என்ற கேள்விக்கு பெருமையாகப் பதில் சொல்வதற்காகவாவது படிக்கணும். தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் சொல்லுவதைப்போல ‘சேவை செய்யணும்’என்பதை செயல் படுத்துபவர்கள் அரிதிலும் அரிது.

சம்பாத்தியம், பெருமை, மதிப்பு, சேவை எல்லாவற்றையும் தாண்டி கல்விக்கு ஓர் உயரிய நோக்கம் இருக்கிறது. அதனைக் கற்றுத்தாருங்கள். கற்றதினால் ஆன பயன் என்னவென்று வாழ்க்கைப் பாடம் போதியுங்கள். கல்வி என்பது அறிவின் வாசல். அறிவை அடைவதன் மூலம் பண்பட்ட நாகரிகமிக்க மனிதர்களை உருவாக்குவது. ஒழுக்க மாண்புமிக்க அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவது என்ற அடிப்படை பாடத்தைச் சொல்லித் தாருங்கள்.

*2. தன்னம்பிக்கை பாடம் நடத்துங்கள்*

தேர்வு முடிவு வெளியாகும் நாள் அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏன் தெரியுமா? எப்படியும் அன்று தற்கொலை முயற்சி செய்த மாணாக்கர் நான்கைந்து பேரையாவது அள்ளிப்போட்டுக் கொண்டு வருவார்கள். ‘நல்ல மதிப்பெண் எடு; இல்லை செத்துத் தொலை’என்ற நிராசையின் விதைகள் மாணாக்கரிடம் ஊன்றப்பட்டுவிட்டது. அதனைக் களைந்து நம்பிக்கை விதையை நட்டு வைப்பது ஆசிரியர்களின் பெரும்பணி.

‘உன்னால் முடியாது’,‘நீ உருப்படமாட்ட’,‘உனக்குச் சரிவராது’ என்ற வார்த்தைகள் ஆசிரியர்களிடமிருந்து எச்சூழலிலும் வரவே கூடாது. ‘நம்மால் முடியும் நம்பு’ இதுதான் நீங்கள் கற்றுத்தர வேண்டிய பாடம். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை விட மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும் மாணவர்களையே நீங்கள் அதிகம் உற்சாகமூட்ட வேண்டும். மதிப்பெண்களுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது என்பதைக் கற்றுத் தாருங்கள்.

*3. புத்தகத்திற்கு வெளியேயும் கல்வி*

கல்வி அவசியம், கல்லாதவருக்கு இவ்வுலகில்லை. கல்வி அறிவின்றி வாழ்தல் சிரமம்தான். ஆனால் கல்வி என்பது வெறும் பள்ளிக்கல்வி மட்டுமே அல்ல. எல்லாராலும் கற்க முடியாது. எல்லாரும் நூற்றுக்கு நூறு வாங்க இயலாது. நூறுவிகித தேர்ச்சி என்பது நமது கல்வித் திட்டத்தின் கோளாறைக் காட்டுகிறது. எல்லாரும் தேறிவிட்டால் அந்த வாழ்வின் அர்த்தம் என்ன? கல்வி கற்காத காமராசர்தான் கல்விக் கண் திறந்தார் என்று சொல்லுங்கள். கல்லூரி சென்று பயிலாத, பத்தாம் வகுப்பு தவறிய கலைஞர் கருணாநிதி முத்தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். தமிழுக்கு அவரே இலக்கணமானார். எழுதப்படிக்கத் தெரியாத நபிகளார்(ஸல்) அவர்களிடம்தான் உலகம் பாடம் கற்றது. தேர்வில் தோற்றாலும் வாழ்வில் வெல்லலாம் எனும் உண்மையை போதியுங்கள்.

‘படிக்க பிடிக்கலமா... நான் கிரிக்கெட் விளையாடப் போறேன்’என்ற மாணவனிடமிருந்து புத்தகத்தை வாங்கிவிட்டு கிரிக்கெட் மட்டையைக் கையில் கொடுத்ததால்தான் சச்சின் டெண்டுல்கர் என்ற அற்புத மட்டையாட்டக்காரர் இந்தியாவிற்குக் கிடைத்தார். எல்லா விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளது. கல்வி என்பது வெறும் புத்தகம் அல்ல. மனப்பாடம் அல்ல. அதற்கு வெளியேயும் கல்வி நீண்டு கிடக்கிறது என்ற பாடத்தை அழுத்தமாய் போதியுங்கள்.

*4. வாசிப்புத் தாகத்தை புகட்டுங்கள்*

‘வாசிக்க வைப்பதுதானே எங்கள் வேலை’என்று புன்னகைக்கின்றீர்கள்தானே...! உங்கள் பாடத்தைக் கடந்து வாசிப்பு வெளியை உங்கள் மாணாக்கருக்கு உருவாக்கிக் கொடுங்கள். தினசரி நாளிதழ் வாசிக்கும் நல்ல பழக்கத்தை உங்கள் வகுப்பறையிலிருந்து தொடங்குங்கள். நல்ல தமிழைச் சொல்லித்தாருங்கள். கவிதை ஆர்வத்தைத் தூண்டுங்கள். சிறுகதை, நாவல்கள் என்ற படைப்பிலக்கிய உலகத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.

புதுமைப்பித்தன் யாரென்று சொல்லித்தாருங்கள். பிரமிளை அறிமுகம் செய்யுங்கள். அழகிரிசாமி, கு.ப.ர, ல.ச.ரா, தி.ஜானகிராமன் தொடங்கி ஜெயகாந்தன், ஞானக்கூத்தன், கவிக்கோ, கலாப்ரியா வரை சொல்லித்தாருங்கள். நூல்களை வாசிப்பதற்கு அனுமதியுங்கள். நூலகத்தில் அவர்களை உறுப்பினராக்குங்கள். அவர்களிடம் கதை சொல்லிக் கேளுங்கள். வாசிப்பு இல்லாத சமுதாயம் குடுட்டு சமுதாயம் என்ற விழிப்பு உணர்வுப் பாடத்தை பள்ளியிலேயே கற்றுத் தந்துவிடுங்கள்.

*5. இலட்சியப் பாதையை அடையாளம் காட்டுங்கள்*

தேர்வு மதிப்பெண்கள் வந்தபிறகுதான் எந்தக்கல்லூரிக்குச் செல்வது? என்ன பாடம் எடுப்பது? என்பதைக்குறித்து பல மாணவர்கள் யோசிக்கின்றார்கள். ‘கவுன்சிலிங் போட்டுவைப்போம்’என்ற அளவில்தான் இலட்சியம் சுருங்கிக் கிடக்கிறது. எனது பாதை எது? எதை நோக்கிப் பயணம்? நான் என்னவாக வேண்டும்? என்பதைத் தீர்மானித்து அதற்கான மதிப்பெண்களைத் திட்டமிடலாம்.

எல்லாருமே மருத்துவர், பொறியாளர் என்றால் என்னாவது? வாழ்வின் புதிய திசையைக் காட்டுங்கள். ‘நீ என்னவாகப் போகிறாய்?’ என்று கேட்டால் ‘கலெக்டராவணும்’ என்று சும்மாங்காட்டியும் சொல்லும் மாணவனை ‘உனக்கு நல்ல எழுத வருகிறது. நீ சிறந்த ஊடகவியலாளராகலாம்’ என்று ஓர் சிறந்த ஊடகவியலாளருக்கான அடித்தளத்தைப் போட்டு அதற்கான பாதைகளைக் காட்டுங்கள். நம் வரலாறு நமக்குத் தெரியவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் காலத்தின் அவசியம். வரலாற்று ஆய்வாளர்கள், மொழியியல் அறிஞர்கள், அரசியல் ஆளுமைகள் என எல்லாவற்றுக்குமான விளைநிலமாக உங்கள் வகுப்பறையை மாற்றுங்கள்.

*6. மதிக்கக் கற்றுத் கொடுங்கள்*

சக மனிதனை மதிக்கும் மாண்பு எனும் உயரிய பாடத்தை நீங்கள் கற்றுத்தரவில்லை எனில் என்னாவது? வயதில் மூத்தவர்களை, பெற்றோர்களை எப்படி மதிப்பது என்பது பாடமில்லையா? இந்தப் பாடம் கற்ற மாணாக்கரால்தான் பேருந்தில் வயதானவர்களுக்கும், கைக்குழந்தையுடன் நிற்கும் பெண்மணிக்கும் எழுந்து இடம் தர முடியும். மாற்றுத் திறனாளிகளிடம் கண்ணியமாக நடப்பதுடன் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஆழப்பதியுங்கள்.

இது பன்மைச் சமூக மண். பல்வேறு மதம், இனம், பண்பாட்டு, மொழியினர் விரவி வாழும் நாடு. பிற மத, சமய உணர்வுகளை மதிக்கும் பாடம் நடத்துங்கள். வெறுப்பற்ற மனங்களை உருவாக்குங்கள். எம்மதமும் சம்மதம் இல்லை. எனக்கு சம்மதம் இல்லாத உன் மதத்தையும், உணர்வுகளையும் மதிக்கின்றேன் என்ற பாடம் மிக முக்கியம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் தாரக மந்திரம்.

பெண்களைப் போற்றுவதற்கு பயிற்றுவியுங்கள். ஆணாதிக்க சிந்தனையை உடைத்து நொறுக்குங்கள். பெண்களை மதிப்பது உயர் மாண்பு என்பதைப் புரிய வையுங்கள். பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் (Good Touch)கெட்ட தொடுதல்  (Bad Touch)எனும் பயத்தைச் சொல்லி வளர்ப்பதற்குப் பதில் ஆண் குழந்தைகளுக்கு பெண்குழந்தைகளைத் தொடாதீர்கள் என்று அழுத்திச் சொல்லுங்கள். சீண்டும் விரல்களை ஒடித்துவிடுவேன் என்று எச்சரியுங்கள்.

*7. நேர்மையைச் சொல்லித் தாருங்கள்*

உங்களிடம் பயின்ற மாணாக்கரில் ஒருவர் கூட நேர்மை தவறியவராக மாறிவிடக் கூடாது என்பதில் நீங்கள் உறுதி கொள்ளுங்கள். இலஞ்சம் வாங்கும் ஓர் அதிகாரியை உருவாக்குவதற்காகவா உங்கள் ஆற்றலைச் செலவழிப்பீர்கள். பொய் சொல்லி கொலைகாரனை விடுவிக்கும் கள்ளத்திறமை கொண்ட வழக்கறிஞர்களுக்கா நீங்கள் வகுப்பெடுப்பீர்கள். மனைவியின் நகையை அடகுவைத்து உயிருக்குப் போராடும் நோயாளியிடம் கமிஷனுக்காக ஸ்கேன் செய்யச் சொல்லும் மனசாட்சி செத்துப்போன ஒரு மருத்துவருக்கா நீங்கள் ஆசிரியராக இருந்திருக்கின்றீர்கள்.

நீங்கள் எத்தகைய திறமையாளர்களை, கல்வியாளர்களை உருவாக்குகின்றீர்கள் என்பதல்ல முக்கியம். நேர்மை தவறிய ஒருவரைக் கூட உருவாக்கி விடக்கூடாது என்பதில் கறாராக இருங்கள். மருத்துவராவதும், பொறியாளராவதும் அப்புறம்.. முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்ற ஆதிபாடம் போதியுங்கள்.

*8. ஒழுக்க மாண்பை விதையுங்கள்*

வகுப்பறையிலிருந்து இன்று கொலைவெறிக்கூச்சல் கேட்கத் தொடங்கிவிட்டது. வகுப்பறைக்குள் கத்தியை எடுத்துவந்து ஆசிரியரைக் கொன்ற மோசமான காலநிலையில் நாம் நிற்கிறோம். வகுப்புத் தோழனைக் கொல்லும் வன்மம் வகுப்பறையில் துளிர்த்திருக்கிறது. கொலைத்தாகம் கொண்டலைகின்றனர். பாலியல் சேட்டை செய்கின்றனர். போதைக்கும், மதுவுக்கும் மாணாக்கர்கள் அடிமையாகின்றார்கள்.

படிக்கட்டில் தொங்கும் மாணவர், தலைமுடியை ஒழுங்காக வெட்டிக் கொள்ளாமல் அலங்கோலமாக முடிவெட்டிக் கொள்ளும் கிறுக்குத்தனங்கள், அலைப்பேசியில் பொழுதைக் கழிக்கும் பொறுப்பற்ற செயல்கள், காதல் என்ற பெயரில் கண்ணாமூச்சி விளையாட்டுகள், சினிமா பைத்தியங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஒழுக்கமற்ற மனசுதான். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற உயரிய பாடத்தை விதைப்பது உங்கள் கடமை

*9. கேள்வி ஞானத்தை ஊன்றுங்கள்*

கேள்வி கேட்க கேட்கத்தான் ஞானம் பிறக்கும். கேள்வி அறிவு மிக முக்கியம். வகுப்பில் மாணவர் கேள்விக்கான இடம் இருக்க வேண்டும். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்? எதற்காக இவ்வுலகிற்கு வந்தேன்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டால் வெற்றி சாத்தியமில்லை. தன் இறைவன் யார்? மரணத்திற்குப் பின் என்ன நிகழும்? இந்த சிந்தனை மிக முக்கியம். இறைவனை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் ஒவ்வொருவரின் உரிமை. ஆனால் அது குறித்து சிந்திப்பது கடமை அல்லவா?

இறைசிந்தனைக்கு இட்டுச் செல்லாத கல்வி இருட்டுத் தத்துவங்களாகவே எஞ்சி இருக்கும். வானம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறது? இரவு பகல் மாறி மாறி வருவது ஏன்? ஒட்டகங்கள் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றன? இதுவும் கல்விதான். இந்தக் கல்வியும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*10. நீங்களே பாடமாக மாறுங்கள்*

உங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இருந்தால் உங்களைக் கண்டு பயம் இருக்கும். ஆனால் மரியாதை இருக்காது. சிடுசிடு, கடுகடுவென இருக்கும் ஆசிரியர்களை எந்த மாணவராவது விரும்புவாரா? புன்னகை எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும். கோபத்தில் எடுத்தெறியாதீர்கள். மாணவர்களைத் தரக்குறைவாக நடத்தாதீர்கள். எச்சூழலிலும் நிதானம் தவறாதீர்கள். அலைப்பேசியில் நீங்கள் மூழ்கிக் கிடந்தால் உங்களைக் குறித்த மதிப்பீடு மாணவர்களிடம் என்னவாக இருக்கும்? ஒழுக்கக் குறைவான எந்தக் காரியத்திலும் ஈடுபடாதீர்கள். ஒருசில ஆசிரியர்களின் ஒழுக்கக் குறைவால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமே தலைகவிழ நேரிடும். எல்லாவற்றையும் கற்றுவிட்டீர்கள் என்ற அகம் உங்களிடம் இருக்கவே கூடாது. எல்லாவற்றையும் கற்றுத்தருவதற்காகவே நீங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றீர்கள். மாணவர்கள் உங்களிடம் கற்றுக் கொள்ள மட்டும் வரவில்லை. உங்களையே கற்றுக் கொள்ள வந்திருக்கின்றார்கள். நீங்களே பாடமாக மாறுங்கள்.
Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here