தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை சோதிக்க வேண்டும் என ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் குறித்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கி வருகிறது.  ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் புதிதாக பாடத்திட்டம், தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடப் புத்தகத்தில் பல்வேறு கடினமான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் பாடப் புத்தகத்தைப் புரிந்து படிக்க வேண்டிய நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் சரியாக கற்பிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை  நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் கூறியது:  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் அரசுப் பள்ளிகளை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வாரத்தில் குறைந்தபட்சம் நான்கு வேலை நாள்கள் அல்லது மாதத்தில் 16 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும். பார்வையிடும் நாளில் காலை இறைவணக்கம் தொடங்கும் முன்னர் பள்ளிக்குச் சென்று, பள்ளி வேலை நேரம் முடியும் வரை பள்ளி வளாகத்தில் இருந்து பார்வையிடும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
கியூஆர் கோடு- விடியோ பாடம்: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களில் ஏதேனும் பிழைகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.  ஆய்வு செய்யும்போது ஆசிரியரின் திறன்களை, பாடத்தை அறிமுகம் செய்யும் விதம், கற்பித்தலில் துணை கருவிகளின் பயன்பாடு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ ஆர் கோடு, விடியோ பாடம், ஆசிரியர்- மாணவர் இடையே நடைபெறும் உரையாடல்,  மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களின் பதிலுக்காக ஆசிரியர்கள் காத்திருக்கும் நேரம், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை குறித்த ஆய்வு, ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப்பொருள் சார்ந்த அறிவு, பாடத்தில் வாழ்க்கையுடன் தொடர்புடைய பொருள்களை அறிந்து கொண்டு சொல்லித் தரும் ஆற்றல்,  ஆசிரியர்கள் சுவாரஸ்யமான சம்பவங்களை எவ்வாறு பதிவு செய்கின்றனர் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.  இது தொடர்பாக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.




Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here