பள்ளி விடுமுறை நாள்களில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களைக் கொண்டு பண்பாடு, கலாசாரம் தொடர்பான பாடங்கள் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

பள்ளி விடுமுறை நாள்களில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களைக் கொண்டு இரண்டு மணி நேரம் தமிழகத்தின் தொல்லியல், மருத்துவம் என நமது பண்பாடு, கலாசாரம் தொடர்பான பாடங்கள் நடத்தப்படும். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். பள்ளிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, அதே பள்ளியில் மாலை வேளைகளில் வகுப்பெடுக்க அனுமதி வழங்கப்படும்.
கர்நாடக மாநிலத்தில் தமிழாசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழாசிரியர்கள் தேவை என அந்த மாநில அரசு நமது முதல்வருக்கு கடிதம் எழுதினால், அது குறித்து பரிசீலினை செய்யப்படும்.

அண்மையில் நான் பின்லாந்து சென்ற போது, அந்த அரசின் சார்பில் எந்த மொழிகள் பேசக்கூடியவர்களாக இருந்தாலும், அங்குள்ள நூலகத்தில் ஒரு அறை தரவுள்ளனர். அதன் அடிப்படையில், மிக விரைவில் தமிழின் தொன்மை வாய்ந்த பல்வேறு நூல்களின் 5 ஆயிரம் பிரதிகளை அங்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி அடுத்த மூன்று நாள்களுக்குள் கிடைத்துவிடும். அனுமதி கிடைத்ததும் நம்முடைய நூல்கள் பின்லாந்துக்கு அனுப்பப்படும்.

விரைவில் ஐசிடி முறையில் கற்பித்தல்: மாறி வரும் கற்றல்-கற்பித்தல் முறைகளை கருத்தில் கொண்டு தகவல் தொடர்பு நுட்பம் (ஐசிடி) மூலம் நவீன சாதனங்களின் உதவி கொண்டு மாணவர்களுக்கு புரியும் எளிய முறையில் பாடம் கற்பிக்கும் திட்டம் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அமல்படுத்தப்படும். இதற்கான பணிகள் அடுத்த மாத இறுதியில் முடிவடையவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு 10 கணினிகளும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகளும் வழங்கப்படும்.

அதேபோன்று, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்காக அடுத்த மாதம் இறுதிக்குள் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமல்படுத்தப்படும். நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக்கல்வித் துறையின் பணியாகும். அந்தத் தேர்வில் ஆள் மாறாட்டம் குறித்து நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்கு சுகாதாரத் துறைதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.


Join Telegram Group Link -Click Here