ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம் உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''ஒரே வளாகமாக இருக்கும் பள்ளியில், ஒற்றைத் தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும். அங்கே நடைபெறும் கல்விப் பணிகளைக் கண்காணித்து, அறிவுரை வழங்க, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வரின் அனுமதியோடு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தை ஒருங்கிணைக்கவும் ஆய்வு செய்து ஆசிரியர்கள் வராதபோதும் கல்வித் தரத்தை ஆய்வு செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை மக்களும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.

நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேற்படிப்புக்கு அனுப்புவது, மருத்துவத் துறையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் ஆளுகைக்கு உட்பட்டது. அவர்தான் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் குறித்துப் பதிலளிக்க முடியும்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீட் நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக 412 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் உள்ள நிறுவனம் மூலம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Join Telegram Group Link -Click Here