மன்னார்குடி அருகேயுள்ள மேலமருதூர் கிராமத்தில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பள்ளிவயதுப் பிள்ளைகள் சுமார் 25 க்கும் மேற்பட்டோர் தம் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழலையர் கல்வி முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இவ்விரு ஊர்களுக்கு இடையில் பாசனத்திற்கு பாயும் கோரையாறின் கிளையாறான அய்யனார் ஆறு ஒன்று நீண்ட நெடுங்காலமாக ஓடி வருகிறது. அண்மையில் இது தூர்வாரப்பட்டு தற்போது மிக ஆழமான நிலையில் நீர் நிரம்ப காணப்படுகிறது. இந்த பள்ளியை விட்டால் இவர்களுக்குக் கல்வி கற்க வேறு பள்ளிகள் எதுவும் அருகில் இல்லை. இந்த நிலையில் இவர்கள் தமக்குத் தாமே சேகரித்த நிதியைக் கொண்டு ஒரு தட்டிப்பாலம் ஒன்றைத் தொடர்ந்து அமைத்துக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். LKG, UKG குழந்தைகள் உள்ளிட்ட மற்ற வகுப்பு மாணவ, மாணவிகள் கடந்த கஜா கோரப்புயலில் பாதிக்கப்பட்ட இந்த தட்டிப்பாலத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி தொடர்ந்து பெய்து வரும் மழையில் ஊறிக்கிடந்து வழுக்கும் தென்னம்பலகையில் மெல்ல காலூன்றி ஒவ்வொரு நாளும் கடந்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது. மேலும், ஆங்காங்கே பாலத்தில் பலகைகள் இல்லாமல் வேறு காணப்படுகின்ற சூழலில் ஒருசில பெற்றோர்கள் மட்டும் தம் பிஞ்சுக் குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்க்கப் பாடுபடுகின்றனர். பலபேர் அவ்வாறு செய்ய முன்வருவதில்லை. பள்ளியில் பணிபுரியும் பாதி ஆசிரிய, ஆசிரியைகளும் பழுதடைந்த பாலத்தைப் பள்ளிக் குழந்தைகளுடன்தான் கடந்து தான் பள்ளி வரும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர்மக்கள் சார்பில் பலதடவை கோரிக்கை மனுக்கள் நேரில் வழங்கியும்கூட இதுநாள்வரை நல்லதொரு தீர்வு எட்டப்படாதது வருந்தத்தக்கதாகும். இந்த சூழலில் பருவ மழைக்காலம் வேறு தொடங்கி விட்டது. சுமார் 2 கி.மீ. சுற்றி வேறு பாதையில் வந்தால்தான் இனி பள்ளி வரும் துர்ப்பாக்கிய நிலையில் அவசர அவசியம் கருதி போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு ஏழை எளிய குழந்தைகளின் கல்வி நலனைக் காத்திட முன்வரவேண்டும் என்பது அனைவரின் ஒருமித்த வேண்டுகோளாக இருக்கிறது. நல்ல தரமான பாதுகாப்பு நிறைந்த புதிய பாலம் மேலமருதூர் பள்ளிக் குழந்தைகளுக்குக் கிடைக்குமா?Join Telegram Group Link -Click Here