முனைவர் மணி கணேசன்
எழுதும் ஒளிரும் ஆசிரியர் - 5
மகிழ்வித்து மகிழ் என்பதுதான் ஆசிரியர்களின் அறம் ஆகும். அந்த வகையில் திறவுகோல் மின்னிதழில் கடந்த நான்கு மாதங்களாகப் பல்வேறு இருபால்
ஆசிரியர்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் இத்தொடர் அவர்களது ஆசிரியப்
பயணத்தில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பலதரப்பட்ட
இணைய மற்றும் முகநூல் பக்கங்களில் இத்தொடரின் மூலமாக இடம்பெறும் ஆசிரியப்
பெருமக்களின் கல்விச் சேவைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக, அரசு சாரா பல்வேறு
அமைப்புகள் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருவது பெருமிதமாக உள்ளது. மன்னையின்
மைந்தர்களின் திறவுகோல் மின்னிதழ் நிர்வாகத்திற்கு ஆசிரியர்களின் சார்பில் நான்
என்றும் நன்றிக்கடன் பட்டவன்.
அதுபோல் ஒவ்வொரு மாதமும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஒன்றியங்களில்
பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களிலிருந்து குறிப்பிட்ட ஒன்றியத்தில் ஒரு சிறந்த
நபரைத் தேர்வு செய்து, அவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் சேகரித்து வெளிப்படுத்துதல் என்பது கடின
முயற்சியாகவே தொடர்கிறது... முத்துக்குளித்தலுக்கு ஒப்பானது இப்பணி. இந்த எனது செம்மைப்
பணி சிறக்க ஒன்றியம்தோறும் காணப்படும் நண்பர்களின் ஒத்துழைப்பு நினைந்து
போற்றத்தக்கது.
அந்த வகையில் இந்த முறை நாம் அறிந்து கொள்ள இருக்கும் நபர் நன்னிலம் ஒன்றியம்
செம்பியநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியை திருமதி கா.அன்பரசி ஆவார். பெயருக்கு ஏற்ப மாணவர்களின் அன்பாசிரியர் இவர். இரண்டு
ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளி என்றாலும் இவரது பெருமுயற்சி காரணமாகப் பள்ளிக்குத்
தேவையான கட்டிடம், குடிநீர் , கழிப்பிடம் மற்றும் தளவாட வசதிகள் அனைத்தும் ஒருங்கே பெற்று திகழ்வது
சிறப்பாகும். சுற்றுச்சுவர் வசதியினை வேண்டிப் பெற்ற போதும் அதற்குரிய பெரிய, அகலமான
இரும்பு வாயிற்கதவு அமைப்பதற்கு தம் சொந்த பணத்தைச் செலவழித்தது ஊர் மக்களிடையே
நற்பெயர் பெற்றுத் தந்தது.
ஒரு பள்ளியை செவ்வனே நிர்வகிக்க அரசு ஆண்டுதோறும்
வழங்கும் பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானிய நிதி மட்டும் போதுமானதல்ல. ஏழை, எளிய,
அடித்தட்டுக் குழந்தைகளின் ஒப்பற்ற புகலிடமாக விளங்கி வரும் அரசுப்பள்ளிகளில்
குழந்தைகள் சார்ந்த பல்வேறு செலவினங்களை ஈடுகட்டும் பொருட்டு பள்ளியின் பெயரில் வைப்பு நிதி இருப்பது அவசியமாகும். இதன்பொருட்டு பள்ளிகளில் பள்ளிப் புரவலர்
திட்டம் குறைந்த பட்சம் தொகையான ரூ.1000 மற்றும் அதன் மடங்குகளில் பள்ளி நிரந்தர
வைப்பு நிதியாக அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது வங்கியில் முதலீடு செய்யப்பட்டு, அவற்றிலிருந்து பெறப்படும்
ஆண்டு வட்டியினைக் கொண்டு மாணவர் நலன் சார்ந்த செலவினங்கள் மேற்கொண்டு வருவதும் இத்திட்டத்தின்
நோக்கமாகும். வயிற்றுக்கும் வாய்க்கும் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கும் படிக்காத,
பாமர பெற்றோர்களிடம் புரவலர் நிதி கோருவதும் பெறுவதும் எளிதில் இயலாத ஒன்று. இவர்
ஒரு முன்மாதிரியாக இத்திட்டத்தில் தாம் இணைந்தது மட்டுமல்லாமல் தம் குடும்பத்தினர்
எழுவரையும் உறுப்பினர்களாக்கியதன் விளைவாக, இன்று இப்பள்ளியின்
புரவலர்களாக மொத்தம் 13 பேர் உள்ளனர்.
ஒரு நல்ல தலைமையாசிரியர் என்பவர் பதிவேடுகளுடன்
மட்டுமே போராடுபவர் அல்லர். பன்முகத்தன்மைக் கொண்டவராகவும் தரமான கற்பித்தலை மாணவரிடையே நிகழ்த்தும்
ஆசிரியராகவும் திகழ்தல் இன்றியமையாதது. இவரது பள்ளி நிர்வாகம் மற்றும் கற்பித்தல்
பணியினை உற்றுநோக்கி வரும் ஊர்மக்கள் ஆங்கில வழிக்கல்வியில் மோகம் கொண்டு தம்
குழந்தைகளை அருகிலுள்ள தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் பணம்கட்டிப் படிக்க வைத்து
அல்லல்பட்டுக் கொண்டிருந்த நிலையிலிருந்து விடுபட்டு இலவச கட்டாயத் தரம் மிக்க
கல்வி வழங்கும் தம் ஊர் ஊராட்சிப் பள்ளியில் மனமுவந்து சேர்க்க முன்வந்தது நல்ல
முன்மாதிரி செயலாகும். நடப்பு ஆண்டு வரை அவ்வாறு சொந்த மற்றும் வேறு குக்கிராமங்களில்
இருந்து இங்கு வந்து படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 14 ஆகும்.
அதுபோல், பள்ளி வளாகத் தூய்மையைத் தொடர்ந்து பேணிக்
காப்பதும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதும் இவரது சுற்றுச்சூழல் சார்ந்த
எண்ணத்தை வெளிக்காட்டும். மேலும், தம் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான கற்றல்
சார்ந்த பொருள்களைப் பல்வேறு சமுதாய சேவை அமைப்புகள் வாயிலாகப் பெற்றுத்தந்து குழந்தைகளின் கற்றலுக்கு உரமூட்டும் நற்பண்பு அனைவரும் பின்பற்றத்தக்கது என்பது மிகையாகாது. ஆண்டுதோறும்
சமத்துவப் பொங்கலிட்டும் விழாக்கள் நடத்தியும் மாணவரிடையே சகோதரத்துவம் வளரப்
பாடுபவராக இவர் காணப்படுகிறார்.
குழந்தைகளின் எதிர்காலம் தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில்
நிர்ணயிக்கப்படுவதாகக் கூறுவர். நல்ல அறிவியல் சிந்தனையும் மனப்பான்மையும்
உருவாகும் இடம் வகுப்பறைகளே ஆகும். மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், முதலாம்
சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவித்ததில்
அக்கால அரசுப்பள்ளிகளில் பணியாற்றிய அறிவியல் பாட ஆசிரியர்களையே சாரும். பொதுவாக
பள்ளிகளில் வகுப்பறைகளை உயிரோட்டமிக்கதாக உருவாக்கிக் காட்டுவதில் ஏனைய பாடங்களைவிட
அறிவியல் பாடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதனாலேயே, அறிவியல் போதிக்கும் ஆசிரியர்களையே
மாணவர்கள் அதிகம் நேசிப்பர். அறிவியல் சார்ந்த எந்தவொரு கடின கருத்தையும் எளிய செயல்விளக்கம் காட்டி எளிமையாகப்
புரிந்து கொள்ள செய்வதை எப்போதும் அறிவியல் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்தகைய கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவரான இவர்,
இடைநிலை ஆசிரியர் பதவியின் பணிமூப்பு அடிப்படையில் தொடக்கப்பள்ளித்
தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தாலும் சூழ்நிலையியல் அறிவியல் பாடத்தைத்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கும் போது, செய்து காட்டல் மற்றும் செய்து கற்றலை மாணவர்களிடம் ஊக்குவித்து
வீடுகள் தோறும் இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக மாணவர்களை உருவாக்கி வருவது
போற்றத்தக்கது. எளிய அறிவியல் சோதனைகளைத் தாமே செய்து காட்டுவதன் மூலமாகக் கற்றல்
இனிமையானதாகவும் இலகுவானதாகவும் மாணவர்களுக்குக் காட்சியளிக்கின்றது. இதுபோன்ற
செயல்பாடுகளால் கற்றலில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் ஈர்க்கப்பட்டு மெல்ல
முன்னேறத் துணிவர். மேலும், மாணவர்களின் அன்றாட வருகையானது தொடர்ந்து அதிகரிக்கும்.
குறிப்பாக, அண்மைக்காலத்தில் ஆசிரியர்கள் மீது
பல்வேறு ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் அவற்றை தமக்குள் ஆழப் புதைத்துக்கொண்டு
சின்னஞ்சிறு ஏழை, எளிய குழந்தைகளின் தெவிட்டாத, கள்ளம்கபடமற்ற நம்பிக்கையுடன்
நோக்கும் முகத்தைக் கண்டதும் சூரியனைக் கண்ட பனித்துளி காணாமல் போவதுபோல்
ஆசிரியர்கள் குழந்தைகள் உலகத்தில் குதூகலமாகி விடுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆசிரியர்களை இழித்தும் பழித்தும் பேசும் வழக்கை
வாடிக்கையாகக் கொண்ட சமூகத்தில் தம் துயரங்களைப் புறந்தள்ளி மாணவர்கள் நலனுக்காகப்
பாடுபடும் ஆசிரியர் கூட்டம் பெருகிக்கொண்டே இருப்பது உண்மை. ஒரு காலத்தில்
சடங்குக்காகவும் சம்பிரதாயத்துக்காகவும் அரசு மட்டுமே தமக்கான விசுவாசம் மிக்க
ஆசிரியர்களைப் பாராட்டிச் சிறப்பித்துவரும் நிகழ்வுகள் ஒருபுறம். தன்னலமின்றி
மாணவர்கள் நலனுக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து தொய்வின்றிப்
பாடுபட்டு வரும் உண்மையான நல்லாசிரியர் பெருமக்களை இன்று பல்வேறு முன்னணி
ஊடகங்களும் அரசு சாரா அமைப்புகளும் மனமார பாராட்டி மகிழும் கோலாகல கொண்டாட்டங்கள்
மறுபுறம். ஆசிரியர்களுள் அனைவருமே நல்லாசிரியர்கள்தாம்! அவர்களுள் யார் மாணவர்கள்
மனத்தில் நீடித்து நிலைத்து நின்று இருக்கின்றார்களோ அவர்களே ஒளிரும் ஆசிரியர்கள்
ஆவர். தலைமையாசிரியர் திருமதி அன்பரசி அவர்கள் அத்தகைய மாணவர் மனம் கவர்ந்த
ஒளிரும் ஆசிரியருள் ஒருவர் ஆவார்.
(இன்னும் ஒளிர்வார்கள்...)
நன்றி: திறவுகோல் மின்னிதழ்
அழைத்து வாழ்த்த : +919942819963
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..