சென்னை: தமிழகத்தில், கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடாத நிலையில், ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்க கோரி தமிழ் வழி கல்வி பயின்ற மதுரையை சேர்ந்த தயனா உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பாணையில் தெரிவிக்காத நிலையில், தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் அனுப்பப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, கணினி ஆசிரியருக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக செப்டம்பர் 6ம் தேதி விளக்கம் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.




Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here